• மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
navigate_next
தேவாரம் - மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

தேவாரம் - மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் 




வாழ்கையில் எல்லாம் நல்ல படியாக போய்க் கொண்டு இருந்தால் மகிழ்ச்சிதான்.  ஆனால்,அப்படி யாருக்குமே அமைவது இல்லை. இன்பம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கிறது. மேடு உள்ள இடத்தில் பள்ளமும் இருக்கிறது.




துன்பம் வரும்போது துவண்டு போகிறோம். என்ன வாழ்க்கை இது என்று சலித்துக் கொள்கிறோம். எதுவுமே ஒரு அர்த்தம் இல்லாதது போல வெறுமையாக உணர்கிறோம்.



சில பேர் மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை போன்ற நிலைகளுக்கு போகிறார்கள்.




அந்த மாதிரி சமயங்களில் இலக்கியங்கள்  நமக்கு ஒரு ஆதரவு கரம் நீட்டுகிறது.




காலம் தாண்டி , கண்ணுக்குத் தெரியாத கையால் நம் கண்ணீர் துடைக்கிறது. வாழ்க்கை என்றால் துன்பம் இருக்கத்தான் செய்யும். துவண்டு  விடாதே.இந்த வாழ்க்கை இனிமையானது , இன்பம் நிறைந்தது. வா, அனுபவிக்கலாம் என்று கை பிடித்து அழைத்துச் செல்லும்.




இந்த மண் இன்பம்.


இங்கே நல்லபடி, இனிமையாக வாழலாம்.


தெய்வம் நமக்கு துணை உண்டு.


இங்கே வாழ்வது மட்டும் அல்ல, வாழ்ந்து முடிந்த பின், நல்ல கதியும் அடையலாம்.




பாடல்


மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே








 பொருள்


மண்ணில்  நல்ல வண்ணம் வாழலாம் = மண்ணில் நல்ல படி வாழலாம்


வைகலும் = எப்போதும்


எண்ணின் = யோசித்துப் பார்த்தால்


நல்ல கதிக்கி =நல்ல கதிக்கு  அடைய


யாதுமோர் குறைவிலை = எந்த குறையும் இல்லை


கண்ணினல் லஃதுறுங் = கண்ணுக்கினிய 


கழுமல வளநகர்ப் = சிறந்த வளங்களைக் கொண்ட கழு மலம் என்ற ஊரில்


பெண்ணினல் லாளொடும் = நல்ல பெண்ணான (பார்வதியோடு)


 பெருந்தகை யிருந்ததே = பெருந்தகை இருப்பதால். தகை என்றால் அன்பு, அருள் , பெருமை  என்று பொருள்




இறைவன் இருக்கிறான் என்று நம்பிக்கையை விதைக்கிறது.