திருக்குறளின் நூற்றி முப்பத்து மூன்று அதிகாரங்களில் `அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற குறளோடு தொடங்கும் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்கிற அதிகாரம். தெய்வத்தை வாழ்த்திப் போற்றித்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக்குறள் என்கிற ஒப்புவமை அற்ற புனித நூலைத் தொடங்குகிறார்.
தெய்வ நம்பிக்கை என்பது நம் தமிழின் மிகப் பழைய இலக்கியப் புதையலான சங்கப் பாடல்களிலேயே தென்படுகிறது. ஆனால், நம் பழைய இலக்கியங்களில் தெய்வத்தை மறுத்துப் பேசும் நாத்திகக் கருத்துக்கு இடமில்லை. மிக மிகப் பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் எந்தெந்த நிலப்பரப்புக்கு எந்தெந்த தெய்வம் என்று வகைப்படுத்தியுள்ளது.
`மாயோன் மேயக் காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும்
வருணன் மேயப் பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே.’
எனத் திருமால், முருகன், இந்திரன், வருணன் ஆகிய தெய்வங்களுக்கான நிலப்பகுதியைத் தனித்தனியே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என வகுத்துப் பழந்தமிழர்கள் வழிபாடு நிகழ்த்தியிருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற பழம்புலவர் தமிழ்க் கடவுளான முருகனைப் போற்றிப் புகழ்கிறார்.
`தாமரை புரையும் காமர் சேவடி
பவழத் தன்ன மேனித் திகழொளி
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே’
இந்தப் பாடலில் முருகக் கடவுளின் தோற்றம், கொடி, ஆயுதம் முதலிய அனைத்தும்
சொல்லப்படுகின்றன.
சங்க இலக்கியத் தொகுப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள நக்கீரர் எழுதிய `திருமுருகாற்றுப் படை’யும் முருகன் புகழ்பேசும் இலக்கியமே. இன்னும் சங்க இலக்கியத்தில் தென்படும் பக்திக் கூறுகள் பல. சங்க காலத்தை ஒட்டிய சங்கம் மருவிய காலத்தில் தோன்றியதாகத் திருக்குறள் பரவலாகக் கருதப்படுகிறது. `நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்பால்கடுகங் கோவை பழமொழி நானூறு இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பதூஉங்கைந்நிலையுமாம் கீழ்க் கணக்கு’ என்கிற பழைய வெண்பா, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாக முப்பால் என்கிற திருக்குறளை வரிசைப்படுத்துகிறது.
என்ன ஆச்சரியம்! சங்கப் பாடல்களில் தெய்வத்திற்கு இன்ன வடிவம், இன்ன நிலம் என்றெல்லாம் தெளிவான அடையாளம் கொடுக்கப்பட்டாலும் வள்ளுவரின் கடவுள் பற்றிய சிந்தனைகள் அப்படிப்பட்ட எந்த அடையாளமும் இல்லாமல் அமைந்து நமக்கு அளவற்ற வியப்பைத் தருகின்றன.
வள்ளுவர் கடவுளின் பெயரையோ, கடவுள் ஆணா பெண்ணா என்பதையோ, நெற்றிக் குறியையோ, கை ஆயுதத்தையோ, வாகனத்தையோ எங்குமே குறிப்பிடவில்லை. பொதுவாக அந்த தெய்வீக சக்தியின் பெருமைகளை மட்டுமே குறிப்பிடுகிறார். சங்கக் கடவுளுக்கும் வள்ளுவக் கடவுளுக்கும் தான் எத்தனை வேறுபாடு! கற்றலின் பயனே கடவுளைத் தொழுவதுதான் என்பது வள்ளுவரின் வலிமையான கருத்து. நாத்தழும்பேற நாத்திகம் பேசுவதை வள்ளுவம் ஒப்புக்கொள்ளவில்லை. `கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்’வள்ளுவர் கடவுளை எட்டுக் குணங்கள் உடையவராகக் காண்கிறார்.
`கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.’கடவுளின் அந்த எட்டுக் குணங்கள் எவை? தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் நீங்குதல், பொருளுடைமை, முடிவில்லாத ஆற்றலுடைமை, வரம்பிலாத இன்பமுடைமை என அந்தக் குணங்கள் சைவ ஆகமத்தில் கூறப்பட்டுள்ளன.
வள்ளுவர் எட்டுக் குணங்கள் உடையவன் எனக் கடவுளைப் பற்றிச் சொல்லும் இந்தக் குறள் திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாம் குறளாக உள்ளது. எனவே இதற்கு முந்தைய எட்டுக் குறள்களிலும் வள்ளுவர் சொல்லும் குணங்களே கடவுளின் எண்குணங்கள் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். ஆதி பகவனாயிருத்தல், வாலறிவனாயிருத்தல், மலர்மிசை ஏகியவனாய் இருத்தல், வேண்டுதல் வேண்டாமை இலாதவனாய் இருத்தல், இருள்சேர் இருவினை சேராதவனாய் இருத்தல், பொறிவாயில் ஐந்தவித்தவனாயிருத்தல், தனக்குவமை இல்லாதவனாய் இருத்தல், அறவாழி அந்தணனாய் இருத்தல் என்பதாக அந்த எட்டுக் குணங்கள் வகைப்படுத்தப் படுகின்றன.
மத நல்லிணக்கத்தைப் பற்றி உரத்துக் குரல் எழுப்பப்படும் இந்தக் காலத்தில் நாம் பின்பற்றத் தக்க சமயம் என்பது வள்ளுவர் கூறும் சமயமே. ஜாதிச் சச்சரவுகள் தலைவிரித்து ஆடுகிற இன்றைய தருணத்தில் வள்ளுவப் பேராசானே நமக்குச் சரியாக வழிகாட்டக் கூடியவர். அவர் சுட்டிக்காட்டும் கடவுளே நம் அனை வருக்கும் ஏற்புடைய கடவுள்.
`வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?’- என்ற மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் கேள்விதான் எத்தனை தர்க்க பூர்வமானது!நாம் எந்தச் சமயத்தைப் பின்பற்றினாலும் வள்ளுவர் கூறும் லட்சிய சமயத்தை நோக்கிச் செல்லும் பாதையாக நம் சமயத்தைக் கொள்வது நல்லது. சமயச் சச்சரவுகளும் சண்டைகளும் வராதிருக்க வள்ளுவர் வகுத்த வழியே நல்ல வழி. சரியான வழி.
வள்ளுவர் சமயம் கடந்த ஆன்மிகத்தையே பேசினாலும், ஒவ்வொரு சமயத்தாரும் வள்ளுவரைத் தங்கள் சமயத்தவர் எனக் கூற ஆசை கொண்டார்கள். வள்ளுவத்தில் இந்திரனைப் பற்றிய கதை வருகிறது. `ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளோர் கோமான் இந்திரனே சாலும் கரி’- என்ற குறளில் கெளதமர் அகலிகைமேல் இச்சை கொண்ட இந்திரனைச் சபித்த நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. இதுபோன்ற குறள்களைக் காட்டி வள்ளுவர் இந்துவே என நிறுவ முயல்வோர் உண்டு.
வள்ளுவத்தின் முதல் குறள்,
`அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு!’
- என்பது. இதில் வரும் `ஆதிபகவன்` என்ற சொற்றொடர், சமணர்களில் முதல் தீர்த்தங்கரரின் பெயர். வள்ளுவம் எழுதப்பட்ட காலத்தில் பெரும் புரட்சிக் கருத்தாகக் கருதப்படக் கூடியது புலால் மறுப்பு என்கிற கோட்பாடு.
`கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்!’
- என்கிறது வள்ளுவம்.
சைவ உணவு என்பது சமணர்களின் மேலான ஒரு கோட்பாடு. வள்ளுவம் சைவ உணவைப் போற்றுவதாலும் ஆதிபகவனைக் குறிப்பிடுவதாலும் வள்ளுவர் தங்கள் சமயத்தவராக இருக்க வேண்டும் எனச் சமணர்கள் கருதுகிறார்கள். சென்னை வந்தவாசி அருகே குந்த குந்தர் மலை என்றொரு சிறிய குன்று இருக்கிறது. அந்தக் குன்றின்மேல் சமணத் துறவியான குந்த குந்தருக்குச் சமாதி உள்ளது. அந்தக் குந்த குந்தரே வள்ளுவர் என்பது சமணர்களின் நம்பிக்கை. குந்த குந்தர் மலையை ஒட்டித் திருக்குறள் மணிமண்டபம் ஒன்று எழுப்பப்பட்டு அதில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ளதைப் போல் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அந்த மண்டபத்தில் திருக்குறள் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
சங்க காலத்தில் ஒரு தெய்வத்தை வழிபட்டவர்கள் மற்ற தெய்வத்தை வழிபட்டவர்களோடு சண்டை செய்ததில்லை. அவரவர் தெய்வம் அவரவருக்கு என வாழும் நல்லிணக்கப் போக்கு அன்று நிலவியது. ஆனால், இடைக்காலத்தில் சமயம் சார்ந்த சண்டைகள் ஏற்படத் தொடங்கிவிட்டதையும் அந்தச் சண்டைகளை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளதையும் காண்கிறோம்.
அண்மைக்காலத்தில், கடந்தகால வரலாறுகளை ஆய்வுசெய்து சரித்திர நாவல்கள் எழுதிய கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, அன்றைய சமயச் சண்டைகளையும் கூடத் தம் புகழ் பெற்ற `பொன்னியின் செல்வன்` நாவலில் சுவாரஸ்யமாகப் பதிவு செய்திருக்கிறார். `நாயன்மார்கள் அறுபத்து மூன்று பேர். ஆனால், ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர் தானே?’ எனப் பெருமை பேசுகிறான் சைவன் ஒருவன். அதற்கு வைணவனான ஆழ்வார்க்கடியான் பதில் சொல்கிறான்: ‘‘ஆமாம். கெளரவர்கள் நூறுபேர். பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர்தான்!’’
இடைக் காலத் தமிழகம் திருவள்ளுவரின் சமயங் கடந்த ஆன்மிக நெறியைப் பின்பற்றியிருந்தாலோ சங்க காலத்தைப்போல் சமய நல்லிணக்கத்தைப் போற்றியிருந்தாலோ இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. சைவர்கள் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினார்கள் என்பது இடைக்காலத்தில் கிடைக்கும் செய்தி. அதை எட்டாயிரம் என்று கூறுபவர்கள் உண்டு. அல்லாமல் எண்ணாயிரம் என்ற பெயருள்ள கிராமத்தில் இருந்த சமணர்கள் என்று விளக்கம் தருபவர்களும் உண்டு. மதச் சண்டை காரணமாக ஒரே ஒரு சமணர் கழுவேற்றப் பட்டாலும் அது எப்படி ஆன்மிகமாகும்? கொலை செய்வதா ஆன்மிகம்? அடுத்த மதத்தவரையும் மனமாற நேசிக்கும் உயர்ந்த அன்பே ஆன்மிகம். மதங்களிலெல்லாம் சிறந்த மதம் அன்புதான்.
`அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்திலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் .
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!’
- என்கிறது திருமூலரின் திருமந்திரம்.
தெய்வ சக்திக்கு வடிவம் கொடுத்து வழிபடுவது தவறல்ல. ஆனால், நாம் வழிபடும் அதே தெய்வ சக்திதான் பிற மதத்தவர்களால் வேறு வேறு வடிவத்தில் வழிபடப்படுகிறது என்பதையும் வடிவமே இல்லாமலும் வழிபடப்படுகிறது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். தண்ணீர் எந்தப் பாத்திரத்தில் இருக்கிறதோ அதன் வடிவத்தை ஏற்றுக் கொண்டு அதே வடிவத்தில் காட்சி தருவது மாதிரிக் கடவுள் சக்தியும் தம் அன்பர்கள் விரும்பும் வடிவங்களை ஏற்கிறது என்பதே உண்மை.
ராமகிருஷ்ண பரமஹம்சர், `மதங்களெல்லாம் நதிகள் மாதிரி. எல்லா நதிகளும் கடலிலேயே கலக்கின்றன. அதுபோல் எல்லா மதங்களும் பரம்பொருள் என்ற கடலிலேயே சென்று சேர்கின்றன!’ என மதங்களின் தத்துவப் பின்னணியை விளக்கினார். தாம் இந்து மதத்தைச் சார்ந்தவர் ஆயினும் இஸ்லாம், கிறிஸ்துவ மதங்கள் உள்பட எல்லா மதங்களின் நெறியிலும் சாதனை செய்து அனுபூதி பெற்றவர் மகான் ராமகிருஷ்ணர்.
ஷீர்டி பாபா இந்து முஸ்லீம் நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர். அவரைப் போன்றே இந்து முஸ்லீம் நல்லுறவுக்காகப் பாடுபட்ட இன்னொருவர் கபீர்தாசர். அவரை இந்துக்கள், முஸ்லீம்கள் என இருதரப்பினரும் திட்டினர். இப்படி உங்களைத் திட்டுகிறார்களே என்று கபீர்தாசரிடம் கேட்டதற்கு `என்னைத் திட்டுகிற விஷயத்திலாவது அவர்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்களே, அதுபற்றி எனக்கு சந்தோஷம்!’ என்றார் அவர்!
அறிஞர் அண்ணாதுரை பெரியாரின் முழுமையான நாத்திகக் கருத்திலிருந்து மாறுபட்டு, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கோட்பாட்டுக்கு வந்து சேர்ந்தார். இந்த வரி திருமூலரின் திருமந்திரத்தில் வருகிறது. கடவுள் பற்றிய கருத்தைச் சொல்லி, அந்தக் கடவுளின் அடையாளங்களைக் குறிப்பிடாமல் விட்ட திருக்குறள், பெரும் படிப்பாளியான அண்ணாதுரையைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும். திருமூலரின் கருத்து திருவள்ளுவரின் கருத்தோடு இணைந்து செல்லக் கூடியது. அண்ணா எடுத்துக்காட்டிய வரி திருமந்திரத்தில் இருந்தாலும் அந்தக் கருத்து திருமந்திரம் எழுதப்படுவதற்கு வெகுகாலம் முன்னாலேயே திருக்குறளில் சொல்லப்பட்டுவிட்டது.
ஆன்மிகத்தின் மிக வளர்ச்சி பெற்ற உயர்ந்த நெறியாக இன்று பலர் போற்றும் அரவிந்த அன்னை நெறி, சமயம் கடந்த ஆன்மிகம் என்பதே. அரவிந்தரும் அன்னையும் சமயத்திற்கு விரோதமானவர்கள் அல்லர். ஆனால், சமயம் கடவுளை அடையும் ஒரு வழிதானே தவிர அந்த வழியே கடவுளாகாது என்பது அவர்கள் கருத்து. அவரவர் தத்தமது சமயம் என்ற வழிமூலம் பயணம் செய்து சமயம் கடந்த ஆன்மிகத்திற்கு வந்துசேர வேண்டும், அப்படி வந்துசேர்ந்து கடவுள் சக்தியை நம்மில் இறக்கிக் கொள்ளவேண்டும்.
மின்சக்தியைப் போல உலகெங்கும் பரவியிருக்கும் தெய்வ சக்தியைத் தூய தவ வாழ்வு மூலம் மனித உடலில் இறக்கிக் கொள்ள முடியும் என்பதைத் தங்கள் வாழ்வால் நிரூபித்தவர்கள் அன்னையும் அரவிந்தரும்.
ஆன்மிகம் பல்லாண்டுகளாகத் தழைத்து வளர்ந்தபிறகு அவர்கள் கண்டறிந்து சொன்ன `மதங்கடந்த ஆன்மிகம்’ என்ற உயரிய கோட்பாட்டிற்கான விதையைத் தமிழில் மிகப் பழங்காலத்திலேயே வள்ளுவர் விதைத்துவிட்டார் என்பது தமிழர்கள் எண்ணிப் பார்த்துப் பெருமை கொள்ளத்தக்க செய்தி. வள்ளுவர் வகுத்த மதங்கடந்த ஆன்மிகக் கோட்பாடு தழைக்குமானால் ஜாதி மதச் சண்டைகள் நிகழ வாய்ப்பே இல்லை.