• தனிப்பாடல்கள் 1
  • தனிப்பாடல்கள் 11-20
  • தனிப்பாடல்கள் 21-30
  • தனிப்பாடல்கள் 31-40
navigate_next
11. என் உள்ளம்!

11. என் உள்ளம்!

 

பலா மரம் மீண்டும் பழையபடியே வளர்ந்து பசுமையாக நின்றது. குறவன் அவர் காலடிகளில் வீழ்ந்தான். 'தன்னைக் காப்பாற்ற வந்த தெய்வம்' என்று அடிபட்டவள் போற்றினாள். சூது செய்தவள் அஞ்சிச் சரணடைந்தாள். தன் பிழைக்கு வருந்தி மன்னிக்குமாறு மன்றாடினாள். ஒளவையார் மிகவும் உருகிப் போனார். ஒன்றுபட்டு வாழும்படியாகக் கூறி அவர்களை வாழ்த்தினார்.

 

குறவனும் அவன் மனைவியரும் ஒளவையாரைப் போற்றி விருந்தளித்து, தன் இனத்தோடும் ஒருங்குகூடி விழாக் கொண்டாடினார்கள். ஒளவையாரும் அந்தக் கள்ளங்கபடமற்ற மக்களின் துய்மையான அன்பிலே திளைத்து உவந்தார்.

 

அவர்களிடம் விடைபெற்று, மீண்டும் சோழனிடம் செல்ல ஒளவையார் விரும்பியபோது, குறவர் குடியினர் வருத்தமுற்றனர். பிரியா விடைதந்து பணிந்து நின்றனர். குறச் சிறுவர்கள் தம் காணிக்கையாக ஒரு படி தினையரிசியை அவருக்கு வழங்கினார்கள்.

 

அந்த அன்பின் சின்னத்தைத் தம் மடியிற் கொண்டவராகச் சோழனிடம் வந்து கொண்டிருந்தார் ஒளவையார்.

 

சோழன் ஒளவையார்பால் தோன்றிய பெருமிதத்தைக் கண்டு வியந்தான். அவர் மடியின் கனம் அவன் கண்ணிலும் பட்டது.

 

"அம்மையே! எங்கிருந்து வருகிறீர்கள்? மடியின் கனம் மிகுதியாயுள்ளதே? அது என்னவோ?’ சோழன் ஆர்வத்துடன் கேட்டான்.

 

ஒளவையார் சிரித்தார். "அது அன்பின் பெருஞ்செல்வம்!" என்றார்.

 

“சோழனே! காட்டிலே குறவர் வீட்டிலே வெட்டுப்ப்ட்டுப் போன ஒரு பலா மரத்தினைச் சுற்றி ஒரு பெரிய பூசல் நிகழ்ந்து கொண்டிருந்தது.பூசலைப்போக்கக் கருதி அந்த வெட்டுண்டம்ரம் பண்டுபோல் தளிர்த்து நிற்குமாறு பாடினேன்.”

 

சோழன் வியப்புடன், "அது மீளத் தழைத்ததோ?" என்றான்.

 

“இறையருள்! அது மீளப் பழையபடியே. பொலிவுடன், நின்றது. குறவர்கள் மகிழ்ந்து என்னை உபசரித்தனர்.அப்போது, அங்குள்ள சிறுவர்கள் உவந்து வழங்கியதுதான் இந்த ஒருங்டி: தினையரிசி”

 

“ஒரு படி தினையரிசியா? செயற்கரிய செயலைச் செய்த தங்கட்குப் பரிசு அதுதானா?” சோழன் கேட்டான்.

 

“தருபவர்களின் அன்பினைத்தான் நான் மதிப்பேன். தருகின்ற பொருளினைப் பெரிதாகக் கொள்வதில்லை. உப்புக்கும் ஒரு கவிதை பாடுவேன். புளிக்கு ஒரு கவிதை பாடவும் என் உள்ளம் இசையும். அதுதான் என் உள்ளத்தின் தன்மை" என்றனர். ஒளவையார்.

 

சோழன், அவரது உள்ளத்தின் தெளிவாகிய அந்த மெய் யுரையைக் கேட்டதும், மெய்மறந்தவனாக வியந்து நின்று விட்டான். ஒளவையார் ஏழை மக்களிடம் கொண்டுள்ள அன்பு அவருடைய பாடலிலேயும் எதிரொலித்தது.

 

அவருடைய உள்ளச் செவ்வியைச் சோழனும் அறிந்து, மனங் கலந்து போற்றினான். ஒளவையாரின் புகழ் அவன் மூலம் பலருக்கும் பரவிற்று.

 

கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறச்சிறார்

மூழக் குழக்குத் தினைதந்தார் - சோழாகேள்

உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒருகவிதை

ஒப்பிக்கும் என்றன் உளம்.

 

“சோழ ராசனே கேட்பாயாக வெட்டுப்பட்டுப்போன பலா மரத்தைத் தழைக்கும்படிப் பாடினேன். குறச்சிறுவர்கள் ஒரு படி தினையைத் தந்தனர். அதுதான் இது. என் உள்ளம் உப்புக்கும் பாடும் புளிக்கும் ஒரு கவிதை சொல்லும், அந்தத் தன்மை யுடையது” என்பது பாட்டின் பொருள்.

 

கூழைப்பலா என்பது பலா வகையுள் ஒன்று அல்லது மிக உயரமாக வளராத பலா மரம் என்பதும் ஆம். தாம் வைத்த பலா காய்த்துப் பலன் தரும்போது தமக்கும் பிள்ளை பிறக்கும் என்பது குறவர் நம்பிக்கை.

navigate_next
12. சாடினாள்!

12. சாடினாள்!

 

வழிநடந்த களைப்பும், பசியின் களைப்பும் சேர்ந்து வருத்த, ஒரு சமயம் ஒளவையார் ஒரிடத்தில் சோர்ந்து அமர்ந்திருந்தார். அவ் வழியாக வந்த ஒருவன் அவர்நிலையைக் கண்டு மிக மனம் வருந்தினான். அவருடைய தோற்றம் அவன் உள்ளத்தை உருக்கியது. அவரை அணுகி அன்போடு விசாரித்தான். அவருடைய பசின்யப் போக்கக் கருதித் தன் வீட்டிற்கும் அவரை விரும்பி அழைத்துச் சென்றான்.

 

அதுவரை அவன் தன் மனைவியைப் பற்றி அடியோடு மறந்துவிட்டான். அவள் நினைவு.அப்போதுதான் எழுந்தது. அவன் உள்ளம் கவலையுற்றது. ஒளவையாரை அழைத்து வந்த தன் அறியாமைக்கு வருந்தினான். எனினும், அவரை அப்படியே திரும்பிப் போகச் சொல்வதற்கும் அவன் மனம் இசையவில்லை. அவரைத் தன் வீட்டுத் திண்ணையில் அமரச் சொல்லிவிட்டு வீட்டினுள் மெல்லச் சென்றான்.

 

மனைவியிடம் விருந்துக்கு ஆள் வந்திருப்பதை எப்படிச் சொல்வது? அவள் சீறுவாளே? அவன் அவளருகே சென்று மெல்ல அமர்ந்தான். அவள் முகத்தை அன்புடன் வருடித் தடவிக் கொடுத்தான். அவள் தலைவாரிக் கொண்டிருந்தாள். அவனே தலையை வாரிவிட்டு, ஈரும் பேனும் எடுத்து, அவள் கூந்தலைப் புனைந்தான். அவள் முகத்தையும் பொட்டிட்டு ஒப்பனை செய்தான். அவள், தன் கணவனின் செயலுக்குக் காரணமறியாமல் சிரித்தாள். அவள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான்.

 

"வாசலில் ஒரு வயதான கிழவி இருக்கிறாள். நம் வீட்டிற்கு விருந்தாக வந்திருக்கிறாள்.அவளுக்கு நம் வீட்டில் உணவு படைக்க வேண்டும்” என்றான்.

 

அதனைக் கேட்டதும் அவள் சினங்கொண்டாள். தன் உடல் வருத்தமுறும் அளவுக்கு எழுந்து நின்று சினக் கூத்தாடினாள். அவன்மீது வசையாகப் பெரிதும் பாடினாள். பழமுறத்தை எடுத்து, வெறிகொண்டவளைப்போல ஒடஓட விரட்டி அவனைப் புடைத்தாள். அவன் என்ன செய்வான்? வெளியிலோ விருந்துக்கு வந்தவர் உள்ளே நடக்கும் கூத்தோ வெளியே தெரியக் கூடியதன்று வாய் திறந்து எதுவும் கூறாமல், அவள் கொடுமையை எல்லாம் சகித்துக்கொண்டு, வீட்டினுள் வளையவளைய வந்தான்.

 

உள்ளே நடப்பதை அறிந்த ஒளவையார், அவன் நிலைக்குப் பெரிதும் பரிதாபப்பட்டார். அவளுடைய நடத்தை அவர் உள்ளத்தில் வெறுப்பை விளைத்தது. அதனைத் தாம்அறிந்துகொண்டதை அறியச் செய்தால் ஊர் பழிக்குமே என்று கருதியாவது அவள் சீற்றத்தை நிறுத்துவாள் என்று நினைத்தார்.

 

இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன்வாங்கி

விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக

ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத் தான்.

 

 என்று அவளும் கேட்குமாறு உரத்த குரலிற் பாடினார்.

 

அந்தப்பாட்டினைக் கேட்டதும், அந்தப் பழிகாரி அப்படியே செயலற்று நின்றுவிட்டாள். "எவரோ பெரியவர் போலிருக்கிறது! சாபம் ஏதாவது கொடுத்துவிட்டால் என்ன செய்வது?" என்று நினைத்து நடுங்கினாள்.

 

"அவரை உள்ளே அழைத்து வா, சோறு போடுகின்றேன்” என்று தன் கணவனிடம் கூறினாள். கணவனும் சற்றுமுன் நடந்ததை எல்லாம் மறந்தவனாக மகிழ்வுடன், ஒளவையாரை உண்ண அழைப்பதற்கு வந்தான். பின்னும் நடப்பதை அறிய விரும்பிய அவரும் உள்ளே சென்றார்.

 

“அருகே அமர்ந்து அவளுடைய முகத்தைச் சீர் செய்து விட்டான். ஈரோடு பேனையும் தலையினின்றும் எடுத்தான். விருந்து வந்திருக்கிறது என்றும் சொன்னான். சொல்லவும், அவள் மிகவும் வருந்தினாள். சினத்தால் கூத்தாடினாள். அவன்மீது வசை பாடினாள். வெறிகொண்டவளாக ஆடி, அவனைப் பழ முறத்தால் ஒடஒடப்புடைத்தாள்” என்பது பாட்டின் பொருள். இப்படியுமா ஒரு பெண்’ என்பது ஒளவைத்தாயின் ஏக்கம்.

navigate_next
13. அமுதும் அன்பும்!

13. அமுதும் அன்பும்!

 

பசித்தீ மிகவும் கொடியது. 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்பார்கள். ஒளவையாரையும் பசித்தீ அப்போது பெரிதாக வாட்டிக் கொண்டிருந்தது. அதனாலும், அந்தக் கணவனின் நல்ல உள்ளத்திற்குக் கட்டுப்பட்டும், அவர் அவன் வீட்டினுள் சென்று அமர்ந்தார்.

 

அந்தக் கணவனுக்கு ஒரே மகிழ்ச்சி, எப்படியோ இந்த அம்மையை உண்ணச் செய்துவிட்டோம் என்ற மனநிறைவு அவன் முகத்தில் ஒளி வீசியது. அந்த அகங்காரி உணவு பரிமாறினாள். அவள் உணவு இட்ட முறையும், நடந்து கொண்ட தன்மையும், வெறுக்கத்தக்க விதமாகவே இருந்தது.

 

ஒளவையார் அன்புக்கு எளியராவார். ஆனால் அகம்பாவத் திற்கு அவர் என்றும் பணிந்ததில்லை. அவர் உள்ளம் அனலாகக்கொதித்தது. சோற்றையும் அகங்காரியின் முகத்தையும் ஒரு முறை நோக்கினார். அப்படியே எழுந்து வெளியே போய்விட்டார்.

 

அந்த அப்பாவிக் கணவன் அவரின் பின்னாகத் தொடர்ந்து ஓடினான். “அம்மையே! உங்களுக்குக் கடுமையான பசியென் பதனை நான் அறிவேன். ஏதோ அவள் குணம் அப்படி என்று கருதி விட்டுத் தள்ளுங்கள். அதற்காக நீங்கள் உண்ணாமற்போவது கூடாது" என்று மிக வேண்டினான்.

 

“தம்பி! அந்த உணவைப் பார்க்கவே என் கண்கள் கூசுகின்றன. அன்பில்லாத அவள் படைத்த அமுது அது. அதைக் கையில் எடுக்கவே நாணம் கொள்ளுகின்றேன். என் வாய் தமிழ் பாடிப் பெருமை பெற்றது. அந்த உணவை ஏற்கத் திறக்க மாட்டேன் என்கிறது. நான் என்ன செய்வேன்?”

 

“என் உடலெல்லாம் வேதனையால் பற்றி எரிகின்றது. என்னால் அதனை உண்ணவே முடியாது” என்றும் கூறினார்.

 

அவன் மனைவியின் கொடுமைகளுக்குப் பழக்கப்பட்டவன். அதனால் மீண்டும் மன்றாடினான். அப்போது, அவர் வாயினின்றும் எழுந்த செய்யுள் இது.

 

காணக்கண் கூசுதே கையெடுக்க நானுதே

மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்

என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ

அன்பில்லாள் இட்ட அமுது.

 

"ஐயையோ! அன்பில்லாத நின் மனையாள் இட்ட அமுது அது! அதனைக் காணவும் கண்கள் கூசுகின்றன! கையால் எடுக்கவும் வெட்கமாகின்றது. பெருமை நிறைந்த என் வாயும் திறக்க மாட்டேன் என்கிறது. பயனின்றி என் எலும்பெல்லாம் பற்றி எரிகின்றது” என்பது செய்யுளின் பொருள்.

 

செய்யுளை இரண்டு முறை படியுங்கள். ஒளவையாரின் உள்ளக் கொதிப்பு நமக்கே புலனாகும். பெண்பாலரான அவர், பெண்களின்பால் அதிக அன்புடையவர்தாம். எனினும், பெண்ணுருவில் அந்த மனையுள் பேய் இருப்பதனைக் கண்டதும் கொதிப்படைந்தார்.

 

அன்போடு அளிக்கும் கூழையும் வியந்து உண்டு பாராட்டும் அந்தக் கனிவான உள்ளமும் கனன்றது. அதனை நோக்கினால், அந்தக் கொடியவளின் தன்மை நமக்குத் தெளிவுபடும்.

 

'மாணொக்க வாய்'என்றது, தமிழ்ப்பாடும் புனிதமான வாய் என்பதனாலாகும்.

navigate_next
14. திருகிப் பறிப்பேன்!

14. திருகிப் பறிப்பேன்!

 

ஔவையாரை உபசரித்த கணவனின் நிலைமை மிகப் பரிதாபமாக இருந்தது. அவன் அவரைப் போகவிடுவதாக இல்லை. இறைஞ்சியபடி கண்களில் நீர் மல்க அவரைப் பணிந்து வேண்டி நின்றான்.

 

"அவள் பிறந்த வேளைப் பயன் அப்படி! என் கதியும் இப்படியாயிற்று. அவளை மறந்துவிடுங்கள். எனக்காக மனம் இரங்குங்கள்’ என்றான்.

 

அவள் பிறந்த வேளை என்ற சொற்கள் ஒளவையாரைச் சிந்தனைக்கு உள்ளாக்கின. இப்படிப்பட்ட பெண்களையும் படைத்தானே? அந்தப் பிரமனை என்ன செய்வது?

 

அவர் சினம் அந்தப் படைப்புக்கு நாயகன்மீது சென்றது. பெண்மையின் இலக்கணம் மென்மையும் அன்பு செறிந்த பண்பும் அல்லவோ அங்ங்ணமிருக்கவும், இந்த அகங்கர்ரியையும் அவன் எங்ங்னம் படைத்தான்?

 

'படைத்ததுதான் செய்தான்; அது போகட்டும், அவள் அகம்பாவத்தை அடக்கும் உள்ளத்திண்மையுடைய ஒருவனை யாவது அவளுக்குக் கணவனாக வகுத்திருக்கக் கூடாதா? உணர்வற்ற மரமாக இருக்கிறானே இவன்! இவனுக்கு அவளை வகுத்துப் பெண்மையைப் பிறர் கைகொட்டி நகைக்கச் செய்துவிட்டானே?

 

அவனை, அந்தப் பிரமனை இப்போது கண்டால்..?

 

சிவனோடு தருக்கிப்பேசி முறைகெட்டு நடந்த அவனுடைய தலைகளில் ஒன்று, அந்தச் சிவனாலே அன்று அறுக்கப்பட்டுப் போய்விட்டது என்பர். அதுபோக எஞ்சி அறுபடாமல் இருக்கும் நான்கு தலைகளையும் பற்றித் திருகி நானே பறித்து எறிந்துவிட மாட்டேனோ?

 

இவ்வாறு குமுறினார் ஒளவையார். படைப்புக்கு இறையவன் அவருடைய சினத்துக்கு உள்ளாகின்றான். அவள் பிறந்த வேளை’ என்ற கையாலாகாத கணவனின் சொற்கள், அவரை இவ்வாறு கூறச் செய்தது. அந்தப் பாடல்,

 

அற்றதலை போக அறாததலை நான்கினையும்

பற்றித் திருகிப் பறியேனோ - வற்றன்

மரமனையா னுக்கிந்த மானை வகுத்த

பிரமனையான் காணப் பெறின்.

 

“வற்றல் மரத்தினைப் போன்றவனான இந்த மனிதனுக்கு இத்தகைய பெண்ணை மனையாட்டியாக விதித்தவன் பிரமன் என்கிறான். அந்தப் பிரமனை யான் நேராகக் காணப்பெற்றால். முன்னால் சிவபெருமானாற் கிள்ளப்பட்டுப்போன ஒரு தலை நீங்கலாக அறுபடாமல் இருக்கும் நான்கு தலைகளையும் பற்றித் திருகி, யான் பறித்துவிட மாட்டேனோ?” என்பது பொருள்.


'மரமனையாளுக்கு இந்த மகனை வகுத்த' எனவும் மூன்றாவது அடி வழங்கும். அது 'வற்றல் மரம்போல அன்பற்ற இவளுக்கு இவனைக் கணவனாக விதித்த என்று பொருளைத் தரும்: அதுவும் பொருந்துவதே!

 

முதல் அடி, ‘அற்ற தலையின் அருகின் தலையதனை' எனவும் வழங்கும். 'அறுபட்ட தலைக்குப் பக்கத்திலுள்ள தலையை என்று அப்போது பொருள்படும். அந்தக் கணவனின் உள்ளத்தில் அவர் சொற்கள் ஆழப் பதிந்தன. அவன் துணிவு பெற்றான். இல்லற வாழ்வை வெறுத்து வெளியேறிவிடத் துணிந்தான். அதனை அடுத்த செய்யுள் கூறும். திருவள்ளுவரும் ஒரு குறளில் படைப்புக்கு நாயகனை நொந்து கொள்ளுகின்றனர்.


'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 
கெடுக உலகியற்றி யான்.


என்பது அது.

navigate_next
15. சந்நியாசம் கொள்!

15. சந்நியாசம் கொள்!

 

வாழ்வு இருவகையானது.ஒன்று இல்லறம் மற்றது துறவறம். இல்லறம் என்பது, இல்லிலிருந்து தக்க மனையாளுடன் கூடி இன்புற்று, இல்லறக் கடமைகளை ஆற்றிச் சிறப்படைவது.

துறவறம் என்பது, அனைத்தையும் கைவிட்டு ஒதுங்கிக் காட்டில் சென்று தவம் பூண்டு ஒழுகுவது.

 

இல்வாழ்வினர் அதை வெறுத்தால் துறவறத்தை நாடுவார்கள். துறவு நெறியினர் நெறி பிறழ்ந்தால் இல்லறத்தை மேற்கொள்ளத் தொடங்குவார்கள்.


இப்படிப்பட்ட வாழ்வு நெறிகளில் அந்தக் கணவன் இல்ல்றத்தை மேற்கொண்டான். அதுவோ கொடுமையான நரகம் ஆயிற்று. அவன் தனக்கு விதித்த விதி அதுவென்று எண்ணி யிருந்தான். அந்த மயக்கம் தெளியவும், அவன் மனிதன் ஆனான்.

 

“என் வாழ்வு கசந்துவிட்டது. இவளோடு வாழ்ந்து இதுவரை பட்ட பாடுகள் போதும். இனி, நான் இவளோடு ஒரு நொடியும் வாழ மாட்டேன். சந்நியாசம் ஏற்கப் போகின்றேன். என்னை ஆசீர்வதியுங்கள்” என்றான்.

 

பொதுவாக இல்லற வாழ்வில் இருப்பவன் ஒருவனைச் சந்நியாசம் கொள்ளத் தூண்டுவது முறையாகாது. 'அறம் எனப்படுவதே இல்வாழ்க்கை என்ற ஆன்றோர் வாக்கினை அது மறுப்பதும் ஆகும். ஆனால், இங்கு உரைத்துள்ள கணவனின் நிலைமையோ முற்றிலும் வேறானது.

 

இன்பம் செழிக்க வேண்டிய வாழ்வில், துன்பம் பேய்க் கூத்தாடியது. அன்பு காட்ட வேண்டிய இல்லாள் அகங்காரியாக ஆட்டிப் படைத்தாள். ஆகவே, அவனுடைய முடிவிலும் நியாயம் இருந்தது. ஒளவையாரும் அதனை உணர்ந்தார். 'இல்லவள் மாட்சியில்லாதபோது அந்த வாழ்வில் உள்ளது என எதுவுமே இல்லையல்லவா? அவனை அவர் மனப்பூர்வமாகவே ஆதரித்தார், ஆசீர்வதித்தார்.

 

பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலுங் கூடி இருக்கலாம் - சற்றேனும்

ஏறுமா றாக இருப்பாளே யாமாகிற்

கூறாமற் சந்நியாசம் கொள்.

 

என்று அவன் முடிவை ஆதரித்துப் பாடினார் அவர்.

 

"கணவனுக்கு ஏற்றவளாக நடந்துகொள்ளும் கற்புடைய மனைவி கிடைத்திருந்தால், எந்த நிலையிலும், அவளோடு கூடி இல்வாழ்விலே ஒருவன் ஈடுபட்டிருக்கலாம். மனைவி கொஞ்சமேனும் முறைகேடு உள்ளவளாக இருந்தாளானால் எவரிடமும் கேளாமல் சந்நியாசம் கொள்வாயாக" என்பது பொருள்.

 

பதிவிரதை-பதியின் கருத்துக்கு இசைய நடப்பதனையே தான் மேற்கொள்ளும் விரதமாக உடையவள். எத்தாலும் எந்த நிலையிலும்; நிலையாவது வளமையும் வறுமையும் இன்பமும் துன்பமும். ஏறுமாறு முறைகேடு, பதிவிரதைத் தன்மைக்கு எதிரான வகையில் நடப்பது. 'கூறாமல்’ என்றது, பலரிடம் கூறினால், அதனால் மனவுறுதி தளர்ந்து விடுதலும் நேரலாம் என்பது பற்றி அவளிடம் எதுவும் பேசாமலும் ஆம்.

navigate_next
16. என்ன செல்வம்?

16. என்ன செல்வம்?

 

ஒளவையாரிடம் சந்நியாசம் மேற்கொள்வதாகச் சொன்னான் அந்த மனிதன். என்றாலும், அவன் மனத்தில் ஒரு சபலமும் எழுந்தது. தன்னுடைய செல்வங்கள் அனைத்தும் பாழாய்ப் போகுமே; அதற்கொரு நல்ல ஏற்பாடு செய்ய வேண்டுமே என்று அவன் கவலைப்பட்டான்.

 

“சந்நியாசம் கொள்வதற்கு முன்பாக என் சொத்துகளுக்கு ஒருவகையான ஏற்பாடு செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றான் அவன். .

 

அவனுடைய நிலைமையைக் கண்டதும் அவர் மனம் வேதனைப்பட்டது. அவனுக்குக் கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்லத் தொடங்கினார்.

 

“நின் மனைவியோ இழிந்த குணம் உள்ளவளாக இருக்கிறாள். சூர்ப்பனகை தாடகை என்று கேள்விப்பட்டிருக்கிறாயா? அந்த அரக்கிகளைப்போல மூர்க்ககுணம் உள்ளவளாகவும் இருக்கிறாள். அவர்களைப் போன்ற கொடூரமான உருவினளும் ஆவாள். இவளைப்போய் மனைவி என்று மணந்துகொண்டாயே? நின்னை என்ன சொல்வது?"

 

"உன் செல்வம் என்ன பெரிய செல்வமோ? அடியார்களின் காற்செருப்புச் சுவட்டின் மதிப்புக்கூட அதற்குக் கிடையாது. அதற்குப்போய்க் கவலைப்படுகிறாயே? உன் அறியாமையை என்ன சொல்வது? உன் போன்றவர் உள்ளத்தை அடக்கிச் சந்நியாசம் கொள்வது எளிதன்று. எல்லாம் நீங்கள் நெருப்பில் வீழ்ந்து உயிர்விடுதல்தான் நல்லது.”

 

இப்படிச் சொன்னார் அவர். அவன் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. துறவுக்கோலம் மேற்கொண்டு வெளியேறி விட்டான். அவன் மனைவி ஏதேதோ பேசினாள். அவனோ எதுவும் பேசாது வெளியேறிப் போனான். சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப் போல்வடிவு கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே-தொண்டர் செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்! "சண்டாளித்தனம் கொண்டவள்; சூர்ப்பநகை தாடகை போன்ற மேனி உடையவள்; இவளைப்போய் மனைவியென மணந்தனையே? தொண்டரின் செருப்புச் சுவட்டின் மதிப்புக்கூடப் பெறாத நின் செல்வம் என்ன செல்வமோ? நீ நெருப்பிலே வீழ்ந்து இறப்பதே நன்றாகும்” என்பது செய்யுளின் பொருள்.

 

தொண்டரின் செருப்புச் சுவட்டைப் போற்றினாலாவது செய்த பாவம் போகும். நல்ல கதியைப் பெறலாம். நின் செல்வம் அத்தகைய பயனைத் தருவதோ?

 

பயன் தருவதாயின், நின் இல்வாழ்விற்கு ஏற்ற துணை இருக்க வேண்டும். அஃதில்லாதபோது பொருளால் வருகிற பயனை நீயும் அடைய முடியுமோ?

 

பொருட்பற்று உடைய நின்னால் சந்நியாசத்தில் உறுதியுடன் இருப்பதும் இயலாத்தாகும். அதனால், நிலையற்ற உள்ளமுடைய நின்போல்வார் நெருப்பில்..விழுந்துசெத்துப்போதலே நன்று.”

 

இவ்வாறு கடுமையாக உரைத்தனர். ஒளவையார்

 

இல்லற நெறிநிற்பவர்கள் இணைந்த மனங்கலந்த உறவினைப் பேணுதல் வேண்டும். அஃதன்றி இருவர்க்கிடையே முரண்பாடு நிலவுமானால், அது வாழ்வே ஆகாது. இந்த ஆண்மையைத் தெளிவுபடுத்துவன இந்தச் சில செய்யுட்கள் ஆகும்.

 

இச்செய்யுளின் இறுதியடி, நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர் எனவும் வழங்கும். அந்தச் செல்வத்தை நெருப்பில் விட்டுப் பொசுக்குக என்பது கருத்து.

navigate_next
17. சிலம்பியின் சிலம்பு!

17. சிலம்பியின் சிலம்பு!

ஒருநாள் ஒளவையார் தெருவூடே போய்க் கொண் டிருந்தார். ஒரு வீட்டுச் சுவரில் ஒரு வெண்பாவின் முதல் ஏழு சீர்கள் மட்டுமே எழுதியிருப்பதைக் கண்டார். ச்ொற்களின் இனிமை அவரைக் கவர்ந்தது. எஞ்சிய பகுதியையும் அறிந்து கொள்ள விரும்பினார். அந்த வீட்டினுள்ளே சென்றார்.

 

' அங்கே ஓர் இளம்பெண் சோர்வுடன் இருக்கக் கண்டார். ஒளவையாரின் உள்ளம் அவளைக் கண்டு இரக்கம் கொண்டது. "மகளே, நின் வீட்டுச் சுவரிலே பாதிப்பாடல் எழுதியிருப்பதைக் கண்டேன். பாடலின் சொற்சுவை எஞ்சிய பகுதியையும் அறிந்து கொள்ளத் தூண்டியது. அதனால், உள்ளே வந்தேன்” என்றார் அவர்.

 

அந்தப் பெண் ஏதும் பதில் சொல்லவில்லை. அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவளுடைய வேதனையின் காரணமாக அழுகுரலும் தோன்றியது.

 

ஒளவையார் திடுக்கிட்டார். அப்பெண்ணின் உள்ளத்திற்கு வேதனையூட்டும் ஒரு சம்பவம் அந்தப் பாதிப்பாடலுடன் புதைந்து கிடப்பது அவருக்குப் புரிந்துவிட்டது. “அழாதே அம்மா! நின் மனம் இப்படிப்புண்படும் என்பதனை அறியாது கேட்டுவிட்டேன். என்னைப் பொறுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு, வெளியே செல்லத் தொடங்கினார்.

 

அந்தப் பெண், அவரை உள்ளே அழைத்தாள்; தன் சோகக் கதையைக் கூறத் தொடங்கினாள்;

 

"என் பெயர் சிலம்பி தாசித் தொழில் செய்து வந்தேன். நான் ஏழையானாலும், என் உள்ளம் தமிழ்ப்பாக்களை விரும்பியது. தமிழ்ச் செய்யுட்களை ஆர்வமுடன் கற்று மகிழ்வேன். அந்த ஆர்வத்தால், ஒரு மடமையான செயலையும் செய்துவிட்டேன்.

 

"கம்பரின் செய்யுட்கள் இப்போது நாட்டில் பெரிதும் மதிக்கப் பெறுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் வாயால் என்னைப் பற்றி ஒரு செய்யுளைப் பாடச் செய்து கேட்க வேண்டும் என்று விரும்பினேன். விருப்பம் வளர்ந்து, தீராத ஆசையாகவும் உருவெடுத்தது.

 

என்னிடமிருந்த பொன்னையும் பொருளையும் எடுத்துக் கொண்டேன். ஐந்நூறு பொன்கள் தேறின. அவற்றைக்கொண்டு கம்பர் பாதங்களில் காணிக்கையாகச் செலுத்தி, அவரிடம் என் விருப்பத்தைக் கூறிப் பணிந்தும் நின்றேன்.

 

அவர் ஆயிரம் பொன்னுக்கு ஒரு பாட்டுப் பாடுகிறவராம். ஐந்நூறு பொன்னுக்கு ஒர் அரைப்பாட்டினை எழுதித் தந்து, எஞ்சிய தொகையைக் கொடுத்தால், செய்யுளை முடித்துத் தருவதாகக் கூறிவிட்டார். என் வேண்டுகோள் எதுவும் பயன் தரவில்லை. அந்தப் பாதிப்பாடல்தான் அது. என்னைப் பற்றி அதில் ஒரு சொற்கூட இல்லை!

 

என் தோல்வி என் உள்ளத்தைச் சிதைத்து விட்டது. என் உடலும் உள்ளமும் மிகவும் சோர்ந்து போயிற்று. இன்னமும் ஐந்நூறு பொன்னுக்கு நான் எங்கே போவேன்?”

 

சிலம்பியின் கதை ஒளவையாரையும் கண் கலங்கச் செய்தது. அவளைத் தேற்றி அந்தச் செய்யுளின் பாதியைத் தாமே பாடி அவளை மகிழ்வித்தார். அவளுடைய அன்பும் உபசரிப்பும் அவரைத் திணறும்படிச் செய்தன. அந்தச் செய்யுள் இது.

 

தண்ணிருங் காவிரியே! தார்வேந்தன் சோழனே

மண்ணா வதுஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்

அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு.

 

"தண்ணிய நீர் எனப் போற்றப்பெறுவது வளமுடைய காவிரியின் நீரேயாகும். வெற்றிமாலை பூண்ட வேந்தன் எனப்பெறுவானும் சோழனே யாவான். நல்ல நிலவளம் உடையதாகப் புகழப்படுவதும் சோழ மண்டலமே ஆகும். பெண் என்னும் பெயருக்குரிய தகுதி நிரம்பியவளும் மிக்க அழகியான சிலம்பியே ஆவாள். அவளுடைய கமலம் போன்ற தாள்களில் அணிந் திருக்கும் செம்பொன்னாலாகிய சிலம்பே போற்றத்தக்க சிலம்பும் ஆகும்” என்பது பொருள்.

 

இச்செய்யுளின் ஒரு பாதி பொய்யாமொழியாராற் பாடப் பெற்றது எனவும், பிற்பாதியை ஒளவையார் பாடி முடித்தனர் எனவும் சிலர் கூறுவர்.

 

'அம்பொற் சிலம்பி’ என்பதற்குப் பதில், 'அம்பர்ச் சிலம்பி’ எனப் பாடபேதம் கொள்பவரும் உளர். அப்போது 'அம்பர் என்னும் ஊரினளான சிலம்பி’ என்று பொருள் கொள்ள வேண்டும்.

 

பொன் பெற்றுப் பாடிய பாதிப்பாட்டு காவிரியையும் சோழனையும் சோழ நாட்டையும் போற்றுவதுடன் நின்றது. ஒளவையார் அருள்கொண்டு பாடியதோ சிலம்பியைப் போற்றியதுடன் அமையாது, அவள் காற்சிலம்புகளையும் சேர்த்துப் புகழ்ந்ததாக அமைந்தது. அந்த அளவுக்கு அவள் வாழ்வு செழிக்க வாழ்த்தியதாகவும் விளங்கியது. இந்த நயத்தை நுட்பமாக அறிந்து இன்புறல் வேண்டும்.

navigate_next
18. ஆரையடா?

18. ஆரையடா? 


"சிலம்பி வீட்டிற்கு ஒளவையார் சென்றிருந்ததும், தம்முடைய செய்யுளை முடித்து அவளை வாழ்த்தியதும் கம்பருக்குத் தெரிந்ததும் அவர் சினம் கொண்டார். ஒளவையாரை எப்படியேனும் இழிவுபடுத்த வேண்டும்" எனவும் நினைத்தார். 


ஒருநாள், சோழன் அவையிற் புலவர் பெருமக்கள் பலரும் குழுமியிருந்தனர். அப்போது தம்முடைய சொற்குறும்பினைத் தொடங்கினார் கம்பர்.  ஆரைக்கீரை ஒரு தண்டின்மேல் நான்கு இலைகளை உடையதாக விளங்கும். அதனை மனத்தே கொண்டார்.


ஒளவையாரை நோக்கி, ‘ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ' என்று சிலேடையாக ஒரு தொடரைச் சொன்னார். எஞ்சிய வற்றைச் சொல்லி ஒளவையார் செய்யுளை முடிக்க வேண்டும்.


கம்பரின் குறும்பினை ஒளவையார் புரிந்து கொண்டார். அதே பாணியில் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது.

 

எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேற்

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னா யடா?


"அவலட்சணமே! எமனின் வாகனமான எருமையே! அளவு கடந்த மூதேவியின் வாகனமான கழுதையே முழுவதும் மேற்கூரை இல்லாதுபோன வீடாகிய குட்டிச்சுவரே!. குலதிலகனான ராமனின் தூதனாகிய அனுமனின் இனமே! அடே! ஆரைக் கீரையைச் சொன்னாயடா’ என்பது பாடலின் பொருள்.


 'யாரையடா சொன்னாய்?’ என்பது போலவும் செய்யுள் ஒலிப்பது காண்க.


 

 
navigate_next
19. சிற்றாடைக்கு நேர்!

19. சிற்றாடைக்கு நேர்!

 

ஒலிவையார் ஒருவரா? இருவரா? மூவரா? இதுபற்றிய விவாதம் நெடுங்காலமாக ஆன்றோர்களிடையே நிலவி வருவதுதான். ஒளவையார் என்ற பலகாலத்துப் புலவர் வரலாறுகளும் காலப்போக்கில் கலந்து போய்விட்டன. இதனை முன்னரே சொல்லியிருக்கிறோம். எவர் பாடியது? காலத்திற்கும் செய்யுளின் அமைதிக்கும் பொருத்தம் உண்டா? இப்படிக் கேட்பதனால் ஏற்படும் முடிவுகள், சில சமயங்களில் விபரீதமாகவும் போய்விடுகின்றன.

 

வள்ளல் பாரியின் மறைவுக்குப்பின், அவன் பெண் மக்களான சங்கவை அங்கவை என்பாரைக் கபிலர் திருக்கோவலூர் மலையமானின் மக்களுக்கு மணமுடித்ததாக ஒரு வரலாறு நிலவுகின்றது. கால ஒற்றுமையும் பிறவும் அதனை அரண் செய்கின்றன. எனினும், கபிலர் அவர்களைப் பார்ப்பார்பால் ஒப்பித்துவிட்டபின், தாம் வடக்கிருந்து உயிர் துறந்தனர் என்றவொரு செய்தியும் அதனுடன் கேட்கப்படுகின்றது.

 

ஒளவையார் பாரி மகளிரை மலையமானின் மக்கட்கு மணமுடித்தனர் என்பது மற்றொரு வழக்கு. அதற்குச் சான்றாக விளங்குவன சில செய்யுட்கள். அவற்றை நாம் காணலாம்.

 

இந்தச் செய்தியும் பாடலமைதியும் பொருத்தமற்றதெனக் கருதிய அறிஞர்கள் சிலர், பாரி என்பான் ஓர் இடையன் எனவும், அவன் மக்கட்கே ஒளவையார் முன்னின்று மணமுடித்து வைத்ததாகவும் உரைப்பார்கள்.

 

இந்தச் செய்திகளை மனத்தேகொண்டு, இதன் தொடர்பாக வரும் செய்யுட்களை மட்டுமே கற்று இன்புறுவோம்.

 

ஒரு சமயம், ஒளவையார் நடந்து சென்று கொண்டிருந்தார். மாலை மயங்கி இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம். பெரிய மழையும் பெய்யத் தொடங்கிற்று. மழையில் நனைந்தவராக குளிரால் நடுங்கியபடியே ஒளவையார் சென்று கொண்டிருந்தார்.

 

அவர் எதிரிலே ஒரு சிறு குடிசை தோன்றவே, அவர் கால்கள் தாமே அதனை நோக்கிச் சென்றன. அந்தக் குடிசையில் இருந்தவர்கள், தம் குடிசையை நோக்கி வருகின்ற மூதாட்டியைக் கண்டனர். அவரை ஏற்று அவருக்கு உதவ ஆவலுடன் எதிர்பார்த்து நின்றனர்.

 

ஒளவையார் குடிசைக்குள் நுழைந்ததும், அந்தப் பெண்கள் தம்முடைய நீலச்சிற்றாடை ஒன்றை அவருக்கு அளித்து, அவருடைய நனைந்த உடைகளை மாற்றச் செய்தனர்.

 

அந்த இரு பெண்களின் அன்பான உபசரிப்பு ஒளவையாரின் உள்ளத்திலே பலவித நினைவுகளை எழச் செய்தன.

 

பாரியைக் காணச் சென்றிருந்தார் ஒளவையார். பாரியின் அளவற்ற தமிழன்பு அவரை ஆட்கொள்ள, அங்கே பல நாட்கள் தங்கிவிட்டார். ஒருநாள், அவனிடம் விடைபெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தார். பாரிக்கு அவரைப் பிரிவதற்கு மனமே இல்லை. மேலும் சில நாட்களாவது அவரை இருக்கச் செய்ய வேண்டுமென நினைத்தான். தானே குதிரை மேற்சென்று ஒளவையாரின் கையிலிருந்த மூட்டையைப் பறித்துக் கொண்டு போய்விட்டான். 'பாரியின் நாட்டிலும் திருடனோ!' என்று வெதும்பிய ஒளவையார், அவனிடம் அதனை உரைத்துக் கண்டிக்க நினைத்து, அவனிடத்திற்கே மீண்டும் வந்தார். அவன் அவரிடம் தன் செயலைக் கூறிப் பொறுத்தருள வேண்டினான். அவனுடைய அன்பின் செயல் அவரை ஆட்கொண்டது.

 

அந்த நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டார். அந்த அன்பின் சாயலை இந்தப் பெண்களின் செயலிலும் கண்டு உவந்தார்.

 

அடுத்து மற்றொரு நிகழ்ச்சி அவர் உள்ளத்தே எழுந்தது.

 

பழையனூரில் காரி என்றொரு வள்ளல் இருந்தான். அவன் தமிழார்வத்தில் தலைசிறந்தவன். அவனைக் காணச் சென் றிருந்தார் ஒளவையார். அவன் ஒளவையாரைத் தன் குடும்பத்தாருள் ஒருவராகவே நினைத்து அன்பு காட்டி வந்தான். ஒருநாள் அவன் குடும்பத்தார் நிலத்திற்குக் களை வெட்டுவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். காரி ஒளவையார் கையிலும் ஒரு களைக்கொட்டைத் தந்தான். விருந்தாக நினையாது தன்னையும் அவருள் ஒருவராகவே மதித்த காரியின் அன்புச் செயல் ஒளவையாரின் மனத்தில் ஆழப் பதிந்து இருந்தது.

 

உரிமையுடன் தம் ஈர உடையை மாற்றி, அந்தச் சிறு பெண்கள், அவர்களுடைய நீலச் சிற்றாடையைத் தமக்கு அணிவித்த செயலை எண்ணினார். காரியைக் காட்டினும், இவர்களின் உரிமைப் பாசம் அவரை மெய்சிலிர்க்க வைத்தது.

 

சேரமான் ஒளவையாரின்மீது அளவற்ற அன்புடையவன். ஒரு சமயம் அவரை அழைக்க நினைத்த அவன், அவரை மரியாதை யுடன் அழைக்க வேண்டும் என்பதைக்கூட மறந்து விட்டான். 'ஒளவையே! வாராய்? என்று உரிமையுடன் அழைத்தான். அந்த அன்புக் கலப்பும் அவரிடம் நிலைபெற்றிருந்தது.

 

அதனினும் உரிமையுடன் தம்மைப் "பாட்டி உடையை மாற்று! நனைந்து விட்டாயே?’ என்றெல்லாம் ஏகவசனத்தில் அழைத்து, வலிந்து தமக்கு நலம் செய்த அந்தப் பெண்களின் செயல் அவரைப் பெரிதும் கவர்ந்தது. அவர் பாடினார்.

 

பாரி பறித்த பறியும் பழையனுர்க்

காரிஅன் றீந்த களைக்கொட்டும் - சேரமான்

வாராயோ என்றழைத்த வார்த்தையும் இம்மூன்றும்

நீலச் சிற்றாடைக்கு நேர்.

 

"அந்நாளிலே பாரியானவன் வழிப்பறி செய்துபோன அந்தக் கொள்ளைச் செயலும், பழையனூர்க் காரி என்பவன் கையிலே களைக்கொட்டினைக் கொடுத்த அந்தச் செயலும், சேரமான் வாராய் என்று அழைத்த உண்மையான உரிமையும் ஆகிய இவை மூன்றும், இந்தப் பெண்கள் அளித்த நீலச் சிற்றாடைக்குச் சமமான அன்புச் செயலாகும்” என்பது பொருள்.

 

ஒளவையார் மிகவும் முதியவர்; நீலச் சிற்றாடை உடுத்தற்குரிய பருவத்தை எப்போதோ கடந்தவர்; எனினும் அப்பெண்கள் தம்மிடம் உள்ளதை அன்புடன் வழங்கினர். அன்பின் மிகுதியால் செய்வதன் தன்மையினையும் மறந்து மடம்பட்ட அவர்களின் தன்மையினைக்கூறி வியந்தது இது.

navigate_next
20. கடகஞ் செறியாதோ?

20. கடகஞ் செறியாதோ?

 

மழைக்குப் புகலிடம் தந்தனர்.உடையை மாற்றி ஈர உடையை உலர்த்தவும் செய்தனர். அத்துடனும் அந்தப் பெண்கள் நிற்கவில்லை.

 

ஒளவையாரின் பசியையும் போக்குவதற்கு முனைந்து, விரைவிலே உணவும் சமைத்தனர். அவரை உபசரித்து உண்ணவும் அழைத்தனர்.

 

அவரும் அமர்ந்து சூடான அந்த உணவினை உண்டு பசி தீர்ந்தார். இட்டது கீரைக்கறியும் சோறுந்தான். எனினும் அன்பின் வெள்ளம் அவற்றையே அமுதமாக்கின. அவர் மனம் பெரிதும் அவர்களுடைய அன்பில் கலந்துவிட்டது. அந்த உணவை வியந்து பாடினார்.

 

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்

நெய்தான் அளாவி நிறம்பசந்து - பொய்யா

அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்

கடகஞ் செறியாதோ கைக்கு.

 

"சூடாகவும், நறுமணம் கொண்டதாகவும், விரும்பும் அளவுக்குத் தின்பதற்குத் திகட்டாததாகவும் நெய்விட்டு அளாவிப் பசுமை நிறமுடையதான இதனைப் பொய்யாகக் கீரைக்கறி என்று சொல்லி அமுதத்தையே படைத்தார்கள். இங்ங்னம் ஆக்கிப் படைத்த இவர்களுடைய கைகள் கடகஞ் செறியப் பெற்றவை ஆகாவோ?’ என்பது பொருள்.

 

கேழ்வரகுக் களியும் முருங்கைக் கீரையும்தான் அவர்கள் க்கிப் படைத்தனர். அந்த எளிய உணவும் அவர்களுடைய அன்பின் சிறப்பால் அமுதாகத் தோன்றுகிறது ஒளவையாருக்கு. அதனை வியந்ததுடன், அவர்களின் ஏழைமை தீராதோ எனவும் வாழ்த்துகின்றார். தம் வாழ்த்தை அவரே பின்னர் உண்மையாக்குவாராக நிறைவேற்றியும் மகிழ்கின்றார்.

 

இச்செய்யுளின் இறுதி அடி, கடகஞ் செறிந்த கையார்’ எனவும், கடகஞ் செறிந்த கையால் எனவும் வழங்கும்.

  • All
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10