• தனிப்பாடல்கள் 1
  • தனிப்பாடல்கள் 11-20
  • தனிப்பாடல்கள் 21-30
  • தனிப்பாடல்கள் 31-40
navigate_next
பரமனுக்குப் பாரம்

1. பரமனுக்குப் பாரம்

அருமைமிகு தமிழ்நாட்டிலே ஒரு வேடிக்கையான மரபு எப்படியோ புகுந்துவிட்டது. சிறப்புடைய சான்றோர்களைத் தெய்வப்பிறப்பினர் என்றே கருதினர். அதனால், அவர்களின் வரலாறு வியப்பான முறையிலே விளங்க வேண்டும் எனவும் எண்ணினர். இந்த எண்ணம் பற்பல புனைவுகளுக்கு மக்களைத் தூண்டின. ஒவ்வொரு பெரும்புலவரின் பிறப்பைப் பற்றியும் வழங்கி வருகின்ற புனைகதைகளுக்கும் இந்த நம்பிக்கையையே காரணமாகக் கொள்ள வேண்டும். இந்தப் புனைவுகளைக் கழித்தே அவைகளை நாம் உளங்கொள்ள வேண்டும்.

சிறந்த பெரும்புலவர்களாக ஒளவையார்கள் விளங்கினர். சங்ககாலப் பெரும் புலவர்களிடையே ஒருவர் இருந்தார். கம்பர் முதலானவர்களின் காலத்தில் மற்றொருவர் இருந்தார். மற்றும் சிலர் வேறு பல காலங்களில் வாழ்ந்திருந்தனர். ஒளவையார் என்ற பெயரின் பொதுமையினால், அவர்கள் அனைவரும் காலப் போக்கில் ஒருவரேயாகிவிட்ட அதிசயமும் நடந்திருக்கிறது. ஒளவையார் சிரஞ்சீவித்தன்மை பெற்றவர் என்ற விநோதமான நம்பிக்கையும் இதன்பின் நிலைபெறலாயிற்று.

'ஒளவையார்' ஆதி என்பவளுக்கும் பகவன் என்பவருக்கும் பிறந்த மக்கள் எழுவருள் ஒருவர். பாணர்களின் வீட்டில் ஆதியும் பகவனும் தங்கியிருந்தபோது பிறந்தவர். அவர்களுடைய ஒப்பந்தப்படி, அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுவிடுமாறு பகவன் பணித்தார். அந்த அம்மை கலக்கமுற்றனர். அப்போது, அந்தச் சிறு குழந்தை தன் வாயைத் திறந்து ஒரு வெண்பாவைப் பாடியது.

அதனைக் கேட்ட தாயான ஆதியும் தன் மயக்கத்தினின்றும் நீங்கினாள்; மனத்தெளிவு கொண்டாள். அதனை அவ் விடத்தேயே விட்டுவிட்டுச் சென்றனர். ஒளவையார் பிறந்த கதை இப்படி வழங்கி வருகிறது. அந்தக் குழந்தை பாடியதாக ஒரு வெண்பாவும் காணப்பெறுகின்றது. அந்த வெண்பா இதுவாகும்,

'உலகத்து உயிரினங்களைத் தோற்றுவித்தவன் சிவபெருமான். உயிர்கள் அதனதன் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளை அவன் கவனிப்பான். அவற்றிற்கு ஏற்றவாறு அதனதன் வாழ்வின் போக்கையும் வகுத்து நிர்ணயிப்பான். இந்த நிர்ணயம் மாற்ற முடியாதது. அதனை முறையே உயிர்களுக்கு ஊட்டுவதற்கு அவன் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது, தவறியதும் கிடையாது.”

'இங்ங்னமாகப் பிறப்பிலேயே வாழ்வுக் கதியை வகுத்துவிட்ட சிவன், ஆதிபரம்பொருள் ஆவான். அவன், என்றும் உள்ளவன்; அவன் செத்துவிடவில்லை; அவன் வகுத்த நியதி மாறுபடப் போவதும் இல்லை. - -

'இந்த உண்மையை உணர்ந்தவர்கள், தன் மக்களின் வாழ்வினைக் கருதிக் கவலைப்படமாட்டார்கள். எத்துணைத் துயரம் வந்தாலும், காக்கும் பொறுப்புக் கடவுளுடையது என்று நினைத்து, அவர்கள் மன அமைதி கொள்வார்கள்.

இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னும்செத்து விட்டானோ - முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரம் அவனுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ.

 

ஒளவைக் குழந்தை வெண்பாவைச் சொல்லி, ‘அன்னையே! நீ நெஞ்சம் வருந்த வேண்டாம் என்று, தன்னைப் பெற்றவளுக்குத் தேறுதலும் கூறிற்று என்பார்கள்.

"அன்னையே! என்பால் விருப்பமுடன், என் வாழ்வின்போக்கு இன்னபடியாக அமைவதாக என்று என் தலையிலே எழுதி, என்னைப் பிறப்பித்த சிவபெருமானும் செத்துப் போய் விட்டானோ? இல்லை அல்லவோ அதனால், மிகவும் கொடிய பஞ்சமே நாடெங்கும் ஏற்பட்டாலும், என்னைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்கே அல்லவா! ஆகவே, நீ உன் நெஞ்சத்தே என்னைக் குறித்த எவ்வகையான, அச்சத்தையும் கொள்ளாது நிம்மதியாகச் சென்று வருக” என்பது இதன் பொருள்.

'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’

 

என்றவாறு, இதே கருத்தினைத் திருக்குறளும் கூறும். அதனையும் இத்துடன் நோக்கிப் பொருள் உணர்தல் வேண்டும்.

'குழந்தை பாடுமா?’ என்று கேட்கலாம். பாடும். அது 'பூர்வ ஞானம் என்று சான்றோர் கூறுகின்றனர். ‘சிவனன்றித் துணை இல்லை என்று அறிவுறுத்தும் சிறந்த வெண்பா இது.

navigate_next
குதிரையும் கிழவியும்

ஒளவையார் சிறந்த சிவபக்தர். சிவபெருமானை மனங்கனிந்து வழிபட்டு வந்ததுடன், அவருடைய மூத்த குமாரரான பிள்ளையார்ப் பெருமானையும் பூசித்து வந்தார். விநாயகரைப் பூசிக்கும்போது, தம்மையும் மறந்து, தியானத்தில் முற்றவும் ஈடுபட்டு விடுவது, இவரது இயல்பாக இருந்தது.

 

ஒருநாள், ஒளவையார் விநாயக பூஜை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது சேரமான் பெருமாளும் சுந்தரரும் கயிலாயம் செல்லப் புறப்படும் செய்தி அவருக்கு கிடைத்தது.

 

ஒளவையாருக்குத் தாமும் அவர்களுடன் கயிலாயம் போக வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. பூசையை விரைவாக முடித்துவிட்டுத் தாமும் அவர்களுடன் சென்று பயணத்தில் கலந்துகொள்ள எண்ணினார். அந்த எண்ணத்தால், பூசையை விரைவாகச் செய்யவும் தொடங்கினார்.

 

ஒளவையாரின் எண்ணத்தை அறிந்து கொண்டான் விநாயகப்" பெருமான். ஒளவையே! அவசரம் ஏதும் வேண்டாம் அவர் களுக்கு முன்னதாக நின்னைக் கயிலாயத்திற்சேர்த்துவிடுகின்றேன். நீ வழக்கம் போலவே நின் பூசையைச் செய்க என்றான்.

 

ஒளவையாரும் விநாயகப் பெருமானின் ஆணைப்படியே நடந்துகொண்டார்.பூசை முடிவுபெற்றது.விநாயகப்பெருமானின் அருளினை நினைந்து ஒளவையார் அகமகிழ்ந்தார். "சீதக்களபம்' என்னும் அகவலைப் பாடி, அப் பெருமானை மனங்கனிந்து துதித்துப் போற்றினார்.

 

தமிழ் உவக்கும் பிள்ளையார்ப் பெருமானின் உள்ளமும் அதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தது. அவன் தன்னுடைய பேருருவை எடுத்து நின்றான். வானகம்வரை உயர்ந்து நின்றது அவன் திருமுடி பாதலம் வரை சென்று நின்றன பாதங்கள், உலகெங்குங்கும் வியாபித்தது அவன் திருமேனி, ஒளவையார் அந்தத் தெய்வக்காட்சியிலே சித்தம் கலந்து மகிழ்ந்தார். வாக்களித்தபடியே அவரைத் தன் துதிக்கையால் எடுத்துக் கைலாயத்திற் சேர்த்து விட்டான் அந்தப் பெருமான்.

 

சேரமான் பெருமாள் அழகிய குதிரைமீது சென்று கொண்டிருந்தார். சுந்தரமூர்த்திகள் யானையின் மீதமர்ந்து சென்று கொண்டிருந்தார். இருவரும் வழியனைத்தும் கடந்து கைலை சென்று சேர்ந்தனர். தம்முடன் ஒளவையாரும் வந்தனரில்லையே என்ற ஏக்கம் அவர்களுக்குள்ளே இருந்தது.

 

கைலைக்கு வந்ததும், தங்களுக்கும் முன்பாக அங்கே வந்ததிருந்த ஒளவையாரைக் கண்டு வியப்புற்றனர். அந்த வியப்பினைச் சேரமானால் கட்டுப்படுத்த முடியவில்லை!

 

‘எங்கட்கு முற்பட நீங்கள் வந்து சேர்ந்தது எவ்வாறோ? என்று கேட்டான் அவன். அப்போது, அவனுக்கு ஒளவையார் சொன்னதாக வழங்குவது இந்தச் செய்யுள்.

 

மதுரமொழி நல்லுமையாள் சிறுவன் மலரடியை

முதிரநினை யவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி

அதிரவருகின்ற யானையும் தேரும் அதன்பின்வரும்

குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே!

 

 "சேரர் குடியாகிய உயர்குடியிலே தோன்றிய மன்னனே! இனிதான சொற்களைக் கூறுகின்ற நன்மையைத் தருகின்ற உமையம்மையின் குமாரன் விநாயகப் பெருமான். அவனுடைய திருவடித் தாமரைகளை அழுத்தமாக நினைந்து தமக்குரிய பற்றுக்கோடாகக் கொள்வதற்கு வல்லமையுடையவர் யாம். எமக்கு, நுமக்கு முன்பாக இவ்விடம் வந்து சேர்தலும் அரிதாகுமோ? மேகத்தின் இடிமுழக்கத்தினைப்போல முழங்கிக் கொண்டு, தாம் நடக்கும் நிலமும் அதிரும்படியாக வருவன், நீங்கள் வந்த யானையும், தேரும், அதன் பின்னாகவே வந்து கொண்டிருந்த குதிரையும் எல்லாம். அவை நாழிகைக்குக் காதவழி நடந்தால், வழி நடக்கவியலாத இந்தக் கிழவியும், கணபதி கருணையால் காதவழி கடந்துவிடுவாள் என்பதனை அறிவாயாக’ என்பது பொருள்.

 

'முதிர நினைய வல்லார்க்கு’ என்றதால், அவர்களிடம் அத்தகைய அன்பின் முதிர்ச்சி நிலைபெறவில்லை என்றும், அதனாலேயே அவர்கள் தாம் முன்னாக வந்ததற்கு வியந்தனர் என்றும் கூறினார். பக்திமையில் தம்மை முற்றவும் இழந்த தனிநிலையே சிறந்த பெருநிலை என்பதைக் காட்டுவது இதுவாகும்.

 

'இறையருள் எதனையும் எளிதாக அடைவிக்கும் என்ற கருத்தும் இச் செய்யுளால் வலுப்பெறும்.

navigate_next
இடம் எங்கே

3. இடம் எங்கே?

 

அந்த நாளிலே சோழன் பெரிதும் தமிழார்வம் உடையவ னாக இருந்தான். கம்பர், புகழேந்தியார், செயங்கொண்டார், ஒட்டக் கூத்தர் ஆகிய பல புலவர்மணிகள் - அவன் அவையில் இருந்தனர். அவன் அவை, மீண்டும் ஒரு தமிழ்ச்சங்கம் உருவானதுபோலத் தமிழ் நலத்தால் மாண்புற்று விளங்கியது.

 

ஒரு சமயம், அந்தச் சோழன் சோலைவளம் கண்டு மகிழ்வதற்காகச் சென்றான். அங்கே, காவிரிக்கரையோரத்தில் ஒரு சங்கு வாயைத் திறந்தபடியே வானத்தை நோக்கியபடி இருக்கக் கண்டதும் அவன் வியப்புற்றான். அப்போது கரையோரத்து, மரத்தின் பூக்களிலிருந்து ஒரு துளி தேன் அதன் வாயில் கொட்டிற்று. அவன் உள்ளம் அதனைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தது.

 

இயற்கையின் கருணையாகிய அரிய ஆற்றல் அவனுக்குப் புலனாயிற்று; அனைத்தையும் பேணிக் காக்கின்ற பேராற்றலின் உயர்வை உளங்கொண்டு போற்றினான். அறிவற்ற சங்கினையும் அங்கு வந்து அண்ணாந்திருக்கச் செய்து, அதன் வாயில் தேன் துளியினையும் வீழச்செய்து இன்புறுத்திய பெருங்கருணை அவனை ஆட்கொண்டது. அந்த நினைவிலே திளைத்தவனாகத் தன் அரண்மனைக்குச் சென்றான். இரவெல்லாம் அந்தக் காட்சி அவன் மனத்தை விட்டு அகலவேயில்லை.

 

மறுநாட்பொழுதும் விடிந்தது. சோழனின் நாளோலக்க அவையும் கூடிற்று. மன்னன் அவைநாயகனாக அமர்ந்திருந்தான். புலவர்களும் அமைச்சர்களும் தளபதியருமாக அனைவரும் அங்கே ஒருங்கே திரளாகக் கூடியிருந்தனர்.

 

அப்பொழுது ஒளவையார் சோழனின் அவையுள் மெல்ல நடந்து வந்தார். அவரைக் கண்டதும் வருக! என்று வரவேற்றான் மன்னன். 'அமர்க' எனவும் சொன்னான். ஆனால் அங்கே அமர்வதற்கு இருக்கை எதுவும் இல்லாததனைக் கவனிக்கவில்லை; அதுபற்றி எவரும் கவலைப்படவுமில்லை.

 

ஒளவையாரோ நெடுந்தொலைவினின்றும் நடந்து வந்தவர்; பல நாட்களாக நடந்து சோர்ந்து போயிருந்தவர்; சோழனைக் காணவேண்டுமென்ற ஆர்வத்தின் மிகுதியினாலே தம் களைப்பையும் மறந்து உடனே சென்றவர். அவரை அவன் முறையாகக் கவனிக்காது, எவரையோ வரவேற்பதுபோல வருக அமர்க!' என்று சொன்னது அவருக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது.

 

கால்நொந்தேன் நொந்தேன் கடுகி வழிநடந்தேன்

யான்வந்த தூரம் எளிதன்று - கூனல்

கருந்தேனுக் கங்காந்த காவிரிசூழ் நாடா

இருந்தேனுக் கெங்கே இடம்?

 

 என்று பாடினார் அவர்.

 

சோழன்; வந்தவரை ஒளவையார் என்று அறிந்து கவனித்தானில்லை. அவன் மனமோ முந் நாளிற் கண்ட அந்த அதிசயக்காட்சியில் முற்றவும் நிலைத்திருந்தது. அதனாலேதான், அவருக்கு இருக்கை தருமாறு எவரையும் ஏவினானில்லை. எனினும், அவருடைய இப் பாடலைக் கேட்டதும், அவன் உள்ளம் தெளிந்து பூரிப்படைந்தது.

 

‘தெய்விக சக்தி உடையவர் போலும்! யான் நேற்றுக் கண்ட காட்சியை அங்ங்னமே உரைத்தனரே!” என வியந்து, அவரை அன்புடன் வரவேற்று உசாவினான். அவரே ஒளவையார் என்று அறிந்ததும், அவனுள்ளம் அளவிலா உவகை அடைந்தது. தான் கண்ட அந்த இனிய காட்சியைத் தன் அவையினர்க்கு உரைத்து, அதனையே அறிந்து உரைத்த ஒளவையாரின் ஞானச் சிறப்பையும் போற்றினான்.

 

"சங்கானது மிகுதியான தேனைப் பருகுவதற்காகத் தன் வாயைத் திறந்து மேல்நோக்கியபடி இருக்கின்ற வளமுடைய, காவிரியாற்றாற் சூழப்பெற்ற நாட்டிற்கு உரியவனே! நின்னைக் காணும் ஆர்வத்தாலே விரைவாக வழியினை எல்லாம் நடந்து கடந்தேன். என் கால்களும் மிகவும் நோவுற்றன. யான் கடந்து வந்த தூரமோ கடத்தற்கு எளிதல்லாத மிக்க நெடுந்துரம் ஆகும். அங்ங்னம் வந்து நின் அவைக்கண் நின்றிருக்கும் எனக்கு, அமர்வதற்கு ஏற்ற இடம்தான் எங்கேயோ?” என்பது செய்யுளின் பொருள்.

 

கூனல் - சங்கு, நத்தை எனலும் ஆம்.

 

கூனலுக்கும் கருந்தேன் கிடைக்கின்ற நாட்டிலே, புலவரான எனக்கு மட்டும் இருக்கவோர் இடம் கிடையாதோ? நின் அன்புப் பரிசிலும் வாயாதோ?’ என்ற குறிப்பையும் பாடல் கொண்டிருக்கிறது.

navigate_next
பகட்டுக்கு மதிப்பு!

4. பகட்டுக்கு மதிப்பு!

 

ஒளவையார் சிறந்த நாவலர். எனினும், எளிமையினையே விரும்புகின்ற பண்பும் உடையவர். தம் கவிதையைப் போற்றிச், செல்வர்கள் உவந்து தமக்குப் பரிசளித்துப் பாராட்ட வேண்டும் என்ற ஆடம்பர நினைவு அறவே இல்லாதவர். மக்களொடு கலந்து தம்முடைய உள்ளத்திலே எழுகின்ற உணர்வுகளைக் கவிதைகளாக வடிக்க வேண்டும்; அதுதான் தமக்கு உவகை தருவது என்ற எண்ணம் உடையவர்.

 

அரசர்களால் உபசரிக்கப் பெற்றாலும், பரிசுகள் வழங்கிப் பாராட்டப் பெற்றாலும், அவர் மனம் உவப்படைவதில்லை.

 

அதேசமயம், ஏழையின் குடிலில் அன்புடன் இடுகின்ற உப்பற்ற கூழ் அவர் நெஞ்சிலே இடம் பெறும் அங்கே கவிதையும் மலர்ந்து இலக்கிய நிலைபெறும்!

 

சோழனின் அவையிலே கம்பர் பெரிதும் போற்றப்பெற்று விளங்கியவர். அரசவைக் கவிஞருள் ஒருவராக அதற்குரிய ஆடம்பரங்கள், அணிவகைகள் முதலியவற்றுடன் விளங்கியவர். அரசனிடம் தனிப்பட்ட செல்வாக்கும் அவருக்கு இருந்தது. அதனால், கம்பரைச் சுற்றிப் பலர் அவரைப் போற்றியபடியே இருந்தனர். அவர் எது சொன்னாலும் அதனைப் பாராட்டினர். அதன் சிறப்பை ஆராய்வதுகூட இல்லை."கம்பரின் வாக்கு அதன் இனிமையே இனிமை! அதன் பொருள் வளமே வளம்?” என்று வாயோயாது வியந்து வியந்து பாராட்டி வந்தனர்.

 

ஒளவையாருக்கு, கம்பரின் அந்த அளவற்ற ஆடம்பரமும், அவரைச் சுற்றியுள்ள போலிப்புலவர் கூட்டமும் வெறுப்பையே தந்தன.

 

ஒருசமயம், கம்பரின் பாட்டொன்றை மன்னன் வியந்து பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டில் அத்துணைச் சிறப்பு எதனையும் காணாத ஒளவையார், அந்த உரைகளைக் கேட்டுச் சிரித்தவண்ணம் இருந்தார்.

 

தற்செயலாக அவர் பக்கம் திரும்பிய மன்னன், அவரது முகபாவத்தை நோக்கினான். தன் கருத்தை அவர் ஏற்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. "தங்கள் கருத்து யாதோ?” எனக் கேட்டுவிட்டான். அப்போது, ஒளவையார் சொன்னது இச்செய்யுள்.

 

“கவிதை ஒன்றைப் பாராட்டும்போது, அதன்கண் அமைந்துள்ள சொல்நயம் பொருள்நயம் ஆகியவற்றையே கருதுதல் வேண்டும். இங்கேயோ கம்பரின் பாட்டு’ என்பதற் காகவே அனைவரும் அதனைப் புகழ்கின்றீர்கள். அந்த நிலைமையை நினைத்துத்தான் நான் சிரித்தேன்" “எளிமையும் புலமை நலமும் பெற்றவர்கள் இங்கே எளிதில் பாரட்டுப் பெறுவது நிகழாது. இந்த அவையின் மதிப்புக்கு உரியவராவதற்குப் பிறபிற ஆரவாரத் தகுதிகளும் நிறைய வேண்டியதிருக்கின்றது” என்றார் ஒளவையார்.

 

"விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்

விரல்நிரைய மோதிரங்கள் வேண்டும்-அரையதனில்

பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை

நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

 

 

அரசவைக்குப் பரிசினை நாடி வந்துள்ள புலவரின் அருகே, தந்திரக்காரர்களாக இருவர் அமர்ந்துகொண்டு, அவரைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தப் புலவரது விரல்களுள் நிறைய மோதிரங்கள் விளங்க வேண்டும். அவர் இடுப்பிலே பஞ்சாடையோ பட்டாடையோ கவினுற விளங்குதல் வேண்டும். அங்ங்னமாயின், அவருடைய கவிதை நஞ்சுபோலப் பிறருக்குக் கேடு விளைவிப்பதானாலும், வேம்பினைப் போலக் கசப்புச் சுவையுடையதாக இருந்தாலும், அதுவே நல்லதென்று இந்த அவையில் ஏற்றுப் போற்றப்பெறும்” என்பது பாடலின் பொருள்.

 

‘விரகர் புகழ்ந்திட எனவே, அது உண்மையான புகழ்ச்சி யாகாது என்றார். சோழனின் அவை புலமைக்கு மதிப்புத் தரவில்லை; புலவரின் புறத்தோற்றத் தகுதியை நோக்கியே மதிக்கிறது என்றும் உரைத்தார். அதனைக் கேட்ட மன்னன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

 

அந்த நிலையே இன்றைக்கும் நிலவுகின்றது. வெளிமயக்கும், விளம்பரப் பெருக்கும், பிறவுமே இன்றைக்கும் ஒருவருக்குச் சிறப்பைத் தருகின்றன.

navigate_next
எல்லார்க்கும் எளிது!

5. எல்லார்க்கும் எளிது!

 

 

ஒளவையார் பாடிய பாடலும் பேசிய பேச்சும் சோழனைப் பெரிதும் வருத்தின. கம்பரிடத்தே அளவற்ற அன்பு கொண் டிருந்தவன் அவன். தன் அவையிலேயே, ஒருவர் கம்பரைப் பழிப்பதைக் கண்டு கலங்கினான். பழித்துக் கூறியவரோ நாடனைத்தும் கொண்டாடும் ஒளவையார், அதனால் அவரைச் சினந்து கொள்ளவும் முடியவில்லை. அவரைத் தெளிவுபடுத்தவே அவன் விரும்பினான்.

 

கம்பர் எனக்கு வேண்டியவர்; இதில் ஐயமில்லை. ஆனால், அவரைப் பாராட்டியது அவருடைய புலமை நுணுக்கத்தை அறிந்து உரைத்ததே ஆகும். மற்றுத் தாங்கள் கருதுவதுபோல அவருடைய ஆடம்பரங்களை நினைத்து அன்று. அவரைப் போலப் பெரிதான காவிய நூலைச் செய்து சிறப்புற்றவர் வேறு யார்தாம் இருக்கிறார்கள்?' என்றான் அவன்.

 

கம்பருக்கு ஆதரவாகவும் அதேசமயம் ஒளவையார் பாரகாவியம் எதுவும் பாடவில்லை என்பதைச் சுட்டியதாகவும் அவன் பேச்சு அமைந்தது. அதனைக் கேட்டார் ஒளவையார்.

 

"சோழனே! தூக்கணாங் குருவியின் கூட்டினைக் கண்டிருப்பாய். அதனைப்போல எவராலாவது ஒரு கூடு கட்டமுடியுமா? குளவிகள் கட்டும் வலிய அரக்குக் கூட்டினைப்போல எவராலாவது செய்வதற்கு இயலுமா?

 

பழமையான கரையானின் புற்று எவ்வளவு அழகுடனும் நுட்பமுடனும் அமைந்திருக்கிறது! தேனிக்கள். கட்டும் கூடுகளிலேதான் எத்தனை அமைப்பு நுட்பம் விளங்குகிறது!

 

சிலந்தியின் வலையைப்போல எவராலாவது ஒரு வலை பின்னிவிட முடியுமோ?

 

இவற்றை யாராலுமே செய்யவியலாதுதான். அதனால், அவற்றையே தொழில்நுட்பத்தில் தலைசிறந்தவை என்று பாராட்டலாமோ? அதற்கு அதனதன் கூட்டினைக் கட்டுதல் எளிது; அஃதன்றி, வேறு எதுவுமே அவற்றுக்குத் தெரியாது.

 

அதனைப்போலவேதான் கவிதையும். ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாயிருக்கும். கம்பர் விருத்தப் பாவில் வல்லவரானால், வெண்பாவில் புகழேந்தியார் இருக்கிறார். உலாவில் நம் ஒட்டக்கூத்தர் வல்லவர். இப்படி ஒவ்வொரு துறையிலும் வல்லவர் உளர். அந்தந்த வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும்! அதுதான் சிறப்பு.

 

"அஃதல்லாமல், ஒரு துறையிற் சிறந்தவரையே எல்லாம் அறிந்தவராகக்கொண்டு, அளவுக்கு மீறிப் பாராட்டுதல் கூடாது. அவரும் அனைவரினும் பெரியவர் என்று செருக்குறுதலும் தவறு. ஒவ்வொருவருக்கும் பிறராற் செய்யவியலாத ஒன்றை எளிதாகச் செய்வதற்கு இயலும். இதனை உணர்ந்து அடங்கியிருப்பதுதான் புலமை உடையவரின் பண்பு” என்றனர்.

 

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

 

 "தூக்கணாங் குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் யாவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிவீர்களாக" என்பது பொருள்.

 

ஒளவையாரின் பாடற்கருத்தினை அந்த அவையாலும், கம்பர், சோழன் ஆகியோராலும் மறுக்க முடியவில்லை. எப்படியோ தன்பால் வளர்ந்துவிட்ட கம்பர் மீதுள்ள அளவற்ற அன்புதான், அவரை அளவுக்குமீறிப் போற்றுமாறு செய்தது என்பதனைச் சோழனும் உணர்ந்தான். அதனால் புலவர்கள் பலர் புண்பட் டிருப்பர் என்பதனையும், தன்மீதுள்ள அச்சத்தாலேயே அதுவரை ஏதும் கூறாதிருந்திருக்கவேண்டும் என்பதையும், அதன்பின் அவன் தெரிந்து கொண்டான்.

navigate_next
பழக்கமும் குணமும்!

6. பழக்கமும் குணமும்!

 

நிலைமையைச் சோழன் உணர்ந்தான். எனினும், புண்பட்ட கம்பரின் உள்ளத்தைச் சிறிதேனும் மாற்றுதற்கும் விரும்பினான். அதனால், மேலும் சிறிது அவரைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.

 

'கம்பநாடரின் இராமாயணப் பெருமையை நம்மால் மறக்கவே முடியவில்லை. கம்பர் பிறவிக்கவிஞர் என்ற பெருமைக்கு உரியவர். ஒளவையார் சொல்வதில் உண்மை இருந்தாலும், அவர் கம்பரின்மீது வேண்டுமென்றே குறை காண்கின்றனர். அந்தக் குறை கம்பர்பால் இல்லை என்பதனை நாமும் அறிவோம்; நம் நாடும் அறியும் என்றான்.

 

கம்பரைப் பிறவிக் கவிஞர்' என்று சொன்னது, பிறரை அவரினும் தாழ்ந்தவர் என்று கூறியதுபோல எதிரொலித்தது. அதனால் அந்த நினைவை மாற்றவும், சோழனுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தவும் ஒளவையார் கருதினார்.

 

அதனால், உலகியல் உண்மைகளாக விளங்கும் சில செய்திகளை எடுத்து உரைப்பவரும் ஆயினார்.

 

சிறந்த சித்திரக்காரன் ஒருவனைப் போற்றுகின்றோம். அவனுடைய ஆற்றல் அவனுடைய தளராத கைப்பயிற்சியினாலே வந்தது. அந்தப் பயிற்சிக்கு வாய்ப்பும் வசதியும் இருந்தால் மேலும் பலர் சிறந்த சித்திரக்காரர்களாக ஆகியிருப்பர்.

 

செந்தமிழ் வல்லார் சிலரைக் காண்கிறோம். முறையான தமிழ்ப்பயிற்சி அளித்தால், நாட்டிலே செந்தமிழ் வல்லார்கள் திரளானபேர் உருவாகி விடுவார்கள்.

 

சிறந்த கல்வி ஞானம் உள்ளவர்கள் என்கின்றோம். அந்த ஞானம் மனத்தை ஒன்றின்பால் உறுதிபெற நிறுத்திப் பழகிய பழக்கத்தால் அமைந்ததாகும். அந்த மனப்பழக்கம் பலருக்கும் ஏற்பட வழிசெய்தால், அவர்களிலும் மிகப்பலர் ஏற்படுவர்.

 

சிலருடைய நடைகள் நமக்குச் சிறப்பாகத் தோன்றும். அது அவர்கள் நாள்தோறும் நடந்து வருகிற ஒழுகலாற்றின் பழக்கத்தால் அமைந்தனவாகும்.

 

இவையெல்லாம், இப்படிப் பழக்கத்தாலும் வாழும் சூழ்நிலையாலும் வந்தமைவனவாம்.இவற்றைப் பிறவிக்குணமாகக் கொள்ளுதல் பொருந்தாது. ஆனால், பிறவிக் குணமாக ஏதும் கிடையாதோ என்று கேட்டால், உண்டு; அவை நட்பு, தயை, கொடை முதலியன.

 

பிறரோடு நட்புடையவராகவும், பிறர்பால் இரக்கங் கொள்ளு கிறவராகவும், பிறருக்குக் கொடுத்து உதவுகிற மனமுள்ளவராகவும் ஒருவர் விளங்கினால், அவரை பிறவியிலே திருவுடையார் என்று போற்றலாம்.

 

இந்தக் கருத்துகளை அழகிய வெண்பா வடிவில் அமைத்துப் பாடினார் ஒளவையார்.

 

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்.

 

 

 "சித்திரம் எழுதும் ஆற்றல் கைப்பழக்கத்தால் அமைவது. செந்தமிழின் தேர்ச்சி நாவின் பழக்கத்தால் வருவது. சேமித்து வைத்த ஒப்பற்ற கல்விச் செல்வம் மனப் பழக்கத்தால் உருவாவது. நாள்தோறும் நடத்தையில் முறையாகப் பழகுவது நடையில் திறமையைத் தருவதாகிறது. ஆனால் நட்பும், இரக்க குணமும், கொடுக்கும் இயல்புமோ பிறவியிலேயே படிந்துவரும் நற்குணங்களாகும்” என்பது இதன் பொருள்.

 

இது, கம்பரின் புலமையினைப் பழக்கத்தால் படிந்தது எனக் கூறியும், பிறவிக் குணங்களான நட்பு, தயை, கொடை முதலியன அவர்பால் காணப்படாதவை எனச் சுட்டிப் பழித்ததாகவும் அமைந்தது.

 

இதனால், இந்த விவாதம் மேலும் சிறிது சூடுபிடித்துத் தொடரலாயிற்று.

navigate_next
7. பூனை கண்ட கிளி

7. பூனை கண்ட கிளி

 

சோழ மன்னனின் நிலைமையோ தர்மசங்கடமாயிற்று. ஒளவையாரின் பேச்சிலே உண்மை ஒலிப்பதை அவனும் அறிவான். எனினும், கம்பரை அவர் அடியோடு மட்டந்தட்டி வருவதனை அவனால் ஏற்கவும் முடியவில்லை; அதனால் அவரை எதிர்க்கவும் மனமில்லை.

 

'பொறுமையே வடிவானவர்' என நாடு போற்றும் பெரும் புலவரான ஒளவையார், இப்படிக் கம்பரை வம்புக்கு இழுப்பதானால், அந்த அளவுக்குக் கம்பரின் பேச்சோ, செயலோ அவருள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி இருக்கவேண்டும் எனவும் அரசன் உணர்ந்தான்.

 

அவைக்கண் இருந்த பிற புலவர் பெருமக்களும் ஏதும் பேசாராய் வாளா இருந்தனர். அவர்களின் மெளனநிலை, அவர்களும் ஒளவையாரின் கருத்தை ஆதரிப்பதாகக் காட்டியது. கூத்தர் இயல்பாகவே கம்பரை விரும்பாதவர். அவர் முகத்திற் படர்ந்த புன்சிரிப்பு பிற புலவர்களுக்கும் புரிந்திருந்தது.

 

நிலைமையை மேலும் வளர்க்க விரும்பாத சோழன், இறுதியாகக்"கம்பரை வெல்பவர் யார்?' என்றான், ஒரு சவால் போல.

 

அஃது, ஒளவையாரை மீண்டும் சினம்கொள்ளத் தூண்டுவது போலவே இருந்தது.

 

"சோழனே! கிளி வளர்ப்பார்கள் பெண்கள். அதற்குப்பாலும் பழமும் வைத்துப் பேசவும் கற்றுக் கொடுப்பார்கள். அதுவும் ஒன்றிரண்டு சொற்களைப் பேசக் கற்றுக்கொள்ளும்.

 

அந்த ஒன்றிரண்டு சொற்களைப் பேசத் தெரிந்ததும் அதற்கு அளவுகடந்த மகிழ்ச்சி பிறந்துவிடும். தனக்கு எல்லாமே தெரிந்துவிட்டதுபோலத் தன் அறியாமையை உணராமல் வெட்கமின்றிப் பேசிக் கொண்டே இருக்கும்.

 

ஆனால் அவ்விடத்தே பெரிய பூனையொன்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம். கிளியின் பேச்சு அறவே நின்றுவிடும். தன் நிலைமை அப்போதுதான் அதற்கு வெளிப்படும். தன் பேச்சு பூனையைக் கொண்டு வந்தது என்பதும் புரியும். உடனே, தன் இயல்பான தன்மை தோன்றக் "கீச்சுக் கீச்சு என்று உயிருக்குப் பயந்து கதறத் தொடங்கிவிடும்.

 

கல்வியின் சிறப்பு என்பது அடக்கத்திலேதான் இருக்கிறது. இதனை அறியாமல் சிலர் மனம் விரும்பியபடி எல்லாம் பேசுகின்றனர். அது அவர் அறியாமையைத்தான் காட்டும். கற்றோர் அவை முன்னர் பணிவு வேண்டும். பணிவின்றி வாய் திறந்தால் வருவது இழிவுதான். இதனை அறிந்து கொள்க’ என்றனர் அவர்.

 

கம்பர் அயர்ந்து போயினர். தம் புகழ்மயக்கமே ஒளவை யாரைக் கொணர்ந்து தம்மை இழித்துப் பேசச் செய்தது என்று உணர்ந்தனர். சோழன் மெளனியானான். அவையோ ஆர வாரித்தது. ஒளவையாரைப் போற்றியது.

 

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்

கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல்

பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தாக்கால்

கீச்சுக்கீச் சென்னும் கிளி.

 

"கற்ற பெரியோரைக் காணாவிடத்தில் அரைகுறை அறிவுடையோர் தாம் விரும்பியபடியெல்லாம் கூச்சல் இடலாம். ஆனால், படித்தவர்கள் முன்பாகப் பணிவின்றி எவருமே தம் வாயைத் திறத்தல் பொருந்தாது. வெட்கமின்றிப் பேசிக் கொண்டேயிருக்கும் கிளியானது, பெரிதான பூனை அந்தப் பக்கமாக வந்தால், தன் பேச்சை மறந்து உயிருக்கு நடுங்கிக் கீச்சுக்கீச்சென்று கதறும். ஆன்றோர் அவையிடத்து, அறியாமல் பேசும் செருக்குடையவர் கதியும், அந்தக் கிளியைப் போன்றது தான்” என்பது பொருள்.

navigate_next
8. அழகு எது?

8. அழகு எது?

 

ஒரு சமயம்,சோழன் ஒளவையாரிடம் உரையாடிக் கொண்டு இருந்தான். திடுமென அவனுக்கு ஒர் ஐயம் பிறந்தது. உலகில் அழகியவை எனக் கூறப்படுபவை யாவை? அதனை அறிந்து கொள்ள அவன் கருதினான். ஒளவையாரிடம் வினவ, அவர் அழகின் உண்மையை விளக்குகின்றார்.

 

"ஓர் இளம்பெண் தன் நாயகனோடு கூடி வாழ்ந்து இன்புற்று மகிழ்கின்றாள். அவளுடைய கூட்டத்தினால் அவனும் நிறை வெய்துகின்றான். இறுதியில், அவள் களைத்துப் போய்ப் படுத்திருப்பாள். அப்பொழுது, இன்பக் கிளர்ச்சியிலே மலர்ந்த தளர்ச்சியும் அவள்பால் தோன்றும். அப்படித் தோன்றும் பெண்மையின் பொலிவான நிறைவான அழகு இருக்கிறதே, அதுதான் இல்வாழ்வார் போற்றும் சிறந்த அழகாகும்.

 

இறைவனை நாடிப் பணிந்து போற்றும் பக்தியை உடையவர், விரதங்கள் பலவற்றையும் தம்முடைய உள்ளத் தூய்மையினைக் கருதியே மேற்கொள்வார்கள். அவர்கள் அதனால் மெலிதலும் கூடும். அங்ங்னம், இளைத்துத் தோன்றுகின்ற மேனி, இறைபக்தி உடையவர் மனமுவந்து போற்றும் அழகாக விளங்கும்.

 

வறியவர்க்கு உதவுவது மிகச்சிறந்த பண்பாகும். உதவி உதவி ஒருவன் மிகவும் பொருள் குறைந்தவனாகவும் போயினால், அவனுடைய அந்தப் பொருள் குறைந்த நிலையும் சான்றோர்க்கு மிகமிக அழகியதாகவே தோன்றும். இஃதன்றிக் கஞ்சப் பிரபுவின் வளத்தை அவர்கள் அழகிது என்று ஒருபோதும் உரைப்பதில்லை.

 

வீரனுக்கு அழகு போர்க்களத்தில் தான் அடைந்த விழுப் புண்ணாக இருக்கும். கொடிய களத்தில் போர் இயற்றிப் பெற்ற வடு பெறற்கரிய பேறாகக் கருதி மதிக்கவும் படும்.வடுப்பட்ட உடல் என்னாது அதனை அழகியதாகக் கருதுவதே சான்றோர் இயல்பு.

 

பொது நன்மைக்காகப் போராடுகிறார்கள் சிலர். அவர்களின் போராட்டத்தில் வெற்றியும் பெறுகின்றனர். ஆனால், அவர்களுள் சிலர் களத்தில் உயிர் இழக்கின்றனர். அவர் நினைவாக அவர்களுடைய பீடும் பெயரும் பொறித்த நடுகற்கள் நிறுத்தப் பெறுகின்றன. தம் உயிரை தம்முடைய இன நன்மைக்கு ஈந்தவரின் நினைவாகிய அந் நடுகற்கள், அந்த இனத்தவர் உள்ளவரை, அவர்கட்கு மிகவும் அழகியதாகவே விளங்கும்.

 

இவ்வாறு அழகு அவரவர் பண்புச் செவ்வியாலேயே அமையும் அழகெனப் பொதுப்பட்ட ஒன்றைக் கவர்ச்சி இனிமை கருதிமட்டும் கூறுதல் பொருந்தாது. இதனை அறிவாயாக" என்றனர் ஒளவையார். அந்த வெண்பா இது.

 

சுரதந் தனில்இளைத்த தோகை, சுகிர்த

விரதந் தனில்இளைத்த மேனி; - நிரதம்

கொடுத்திளைத்த தாதா, கொடுஞ்சமரிற் பட்ட

வடுத்துளைத்த கல்அபிரா மம்.

 

 “நாயகனோடு கூடி இயற்றிய சுரத அநுபவத்தாலே களைத்திருக்கின்ற நாயகியும், நன்மைதரும் விரதங்களை மேற்கொண்டதனால் இளைத்த பக்தரின் மேனியும், எக்காலமும் வறியவருக்குக் கொடுத்துக் கொடுத்துத் தன் செல்வம் இழந்து போன கொடையாளியும், கொடுமையான போரினிடத்தே பெற்ற வீரனின் வடுக்களும், பீடும் புகழும் குறித்துப் போரில் வீழ்ந்தோருக்கு நாட்டப்பெற்ற நடுகல்லும், சான்றோர் போற்றும் அழகான பொருள்களாகும்” என்பது பொருள்.

 

இதனால், ஒன்று அழகியதாகக் கொள்ளப்படுவது, அதனைக் கொள்பவரின் மனநிலையினை ஒட்டியும், செய்தவரின் சால்பினைக் கருதியும் அமைவதாகும் என்ற உண்மை விளங்கும்.

navigate_next
9. நல்காத செல்வம்!

9. நல்காத செல்வம்!

 

செல்வம் சிலரிடம் தானாகவே சேருகின்றது. பலரிடம் முயற்சியின் அளவாலே தொழில் பெரிதானாலும்கூடச் செல்வம் மிகுதியாக வந்து சேர்வது இல்லை. செல்வத்தின் இத்தகைய நிலையினை நம் முன்னோர்கள் உணர்ந்தவர்கள்.

 

இதனால், செல்வம் சேர்வது பிறருக்குக் கொடுத்து அவரையும் நல்வாழ்வினராகச் செய்வதற்கே என்பதனை அவர்கள் வற்புறுத்தினர். கொடுக்கும் பண்பு சிறந்த மனிதப் பண்பாகவும் ஆயிற்று. கொடுப்பவரினும், மேம்பட்ட வள்ளல்களாகப் பலர் இருந்தனர்.

 

கொடையினால் நாட்டின்கண் பரவுகின்ற புகழையும் அதனால் தமக்கு உயர்கின்ற பேற்றையும் கருதி, கொடுக்கும் குணமற்ற சிலரும்கூடக் கொடுக்கும் வழக்கம் உடையவராக மாறினர்.

 

சோழன் கொடையின் மரபினை அறியாதவன் அல்லன். மரபினை அறிந்ததுடன் அதனைப் பேணி நிகழ்த்தியும் சிறப்புப் பெற்றிருந்தான். எனினும், ஒருநாள் அவனுக்கு ஒர் ஐயம் எழலாயிற்று. அருகிலிருந்த ஒளவையாரிடம் அதற்கு விளக்கமும் கேட்கலானான்.

 

"அம்மையே! வாழ்வில் இச்சை உடையவர்கள் மனிதர்கள். அவர்கட்குப் பொருளினால் பயன் உண்டாகும். அவர்கட்குப் பொருளை வழங்குவதும் தகுதியுடையதாகிறது. ஆனால், சிவனடியார்கள் சிலரும் வந்து பொருள் கேட்கின்றனரே? உலக இச்சையை ஒழித்து இறையின்பத்திலே திளைக்கும் அவர்கட்குப் பொருள் வழங்குவது முறையா? அந்தப் பொருள் அவர்களுடைய சிவ ஒழுக்கத்தையே மாற்றிவிடாதா?’ என்றான்.

 

சோழனின் அறிவுதுட்பம் ஒளவையாரைச் சிந்திக்க வைத்தது. அவர் விளக்கம் கூறலானார்.

 

“மன்னவ! செல்வத்தைச் சிவனடியார்க்கு வழங்க வேண்டுமோ என்கிறாய்? அவர்கள் அதனைச் சிவகாரியங்க ளாகிற பொது நன்மைக்கு உதவுகிறவற்றிலேதான் செலவிடுவர். அதனால், அவருக்கு அளிக்கும் கொடை அளவற்ற பலருக்கும் அளித்த கொடையாகிப் பரந்த புகழினை நினக்குத் தருகிறது. இதனை எண்ணினால், அவருக்கு மனமுவந்து வாரி வழங்குதலே செய்ய வேண்டியதாகும் என்பேன் யான்.

 

அவருக்கு வழங்காத செல்வங்கள் வேறு என்ன வகைக்குப் பயனாகப் போகின்றன? பில்லி சூனியக்காரர்களுக்குப் பயன் படலாம். பேயூட்டுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். பரத்தையர் கட்கு வழங்கி அவரைக் கூடி இன்புற்றுக் கெடலாம். வீண் செலவுகள் செய்யலாம். கொள்ளைக்காரர்களுக்கு விருந்தாகலாம். மனத்தை மயக்கும் கள்ளுக்கு விலையாகத் தரலாம். அல்லது பகை அரசரால் எடுத்துக் கொள்ளப்பட்டும் போகலாம். கள்ளருக்குக் கவர்ந்து போவதற்கும், நெருப்பிற்கு உணவாவதற்கும் கிடைக்கலாம்.

 

இவற்றால் ஆகும் சிறப்பென்ன? அதனால், இவற்றிற் பாழாகிற பணத்தை தடுத்து நம்பன் அடியவர்க்கு நல்குவதே சிறப்புடைய செயலாகும்.” .

 

ஒளவையாரின் விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. சோழனும் மகிழ்ந்து அவரைப் போற்றினான்.

 

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்

பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்

கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்

கள்ளர்க்காம் தீக்காகும் காண்.

 

 “நம் பெருமானான சிவனின் அடியவர்களுக்கு மனமுவந்து வழங்காத செல்வங்கள், சூனிய வித்தைகட்கும், பேய் வழிபாடு கட்கும், பரத்தையர்களுக்குக் கொடுத்தற்கும், வீண் செயல் களுக்கும், கொள்ளை கொடுத்தற்கும், மதுவுக்கும், பகை அரசரால் பறிமுதல் செய்யப்படுவதற்கும், அவனுடைய சாவுச் செலவிற்கும், கள்வரால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும், நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்குமே உரியவாகும்” என்பது பொருள்.

 

அடியார் உலக நலம் கருதுபவர். உலகம் உய்வதற்குப் பாடுபடும் உயர்ந்தோருக்கு உதவுவது மிக உயர்வுடையதாகும் என்பது கருத்து.

 

சிறந்த செயலைச் செய்பவர்க்கு உதவாதவர்களின் மனநிலை இழிந்ததாகவே இருக்கும். அதனால்தான் அவர்களின் செல்வம் பல வழிகளிலும் பாழாகும் என்கிறார்.

 

சிவ காரியங்களுக்குப் பயன்படுத்தாத செல்வம் அவகாரியங் களிலே வீணாகிக் கரையும் என்பதும் இது.

navigate_next
10. பண்டுபோல் நிற்க!

10. பண்டுபோல் நிற்க!

 

இந்நாளில், ஒருவன் இரண்டு மனைவியரை மணஞ்செய்து கொள்ளல் இயலாது. சட்டப்படி இது தடை செய்யப்பட்டு விட்டது. முன்காலத்தில் அப்படியில்லை. இரண்டு மூன்று மனைவியரை ஒருவன் மணந்து கொள்வது என்பது மிகவும் சாதாரண நிகழ்ச்சியாகவே கருதப்பட்டது.

 

அக் காலத்தில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. கட்டுடல் கொண்ட காளையர்கள் பலர் போர்க்களத்தில் வீழ்ந்துபட்டனர்.

 

இதனால் பெண்கள் மிகப் பெருக்கமாக இருந்தனர். ஒருவனுக்கு இருவர் மூவர் என்பதும், அதனால் சமுதாயத்தின் மரபாகவே விளங்கிற்று.

 

அந்த நாளிலே, ஒரு குறவன் இரண்டு மனைவியரை மணந்து கொண்டிருந்தான். மூத்தவட்குக் குழந்தையில்லாமற் போனதே இரண்டாமவளை அவன் மணந்ததற்குக் காரணமாக இருந்தது.

 

அவளுக்கும் குழந்தை பிறக்கவில்லை. இருவரும் ஒருவருக் கொருவர் தீராத பகைகொண்டு சண்டையிட்டு வந்தனர்.

 

அவன் ஒரு பலா மரத்தை மிகவும் பேணி வளர்த்து வந்தான். பலாவும் செழித்து வளர்ந்து காய்களும் கனிகளுமாக விளங்கிற்று. அவனுக்கு அளவற்ற பெருமை!

 

அவன் மனைவியர்களுள் இளையவள், ஒரு நாள் மூத்தாளை ஒழிக்க எண்ணமிட்டாள். பலாவை வெட்டிவிட்டுப் பழியை மூத்தவள்மீது சுமத்தினால், தன் கணவனே அவளை அடித்து விரட்டி விடுவான் என்ற கரவான எண்ணம் அவளிடம் உருவாயிற்று. அவன் வெளியே சென்றிருந்தபோது, அவளுடைய மூத்தாளும் வீட்டில் இல்லாத வேளையில், அவள் தன் எண்ணத்தைச் சுலபமாக நிறைவேற்றி விட்டாள்.

 

குறவன் திரும்பி வந்தான். பலாவின் நிலையைக் கண்டு கொதித்தான். சூதுக்காரி, தன் மாற்றாள்மீது பழி சுமத்தினாள். அவன் சினங்கொண்டான். அவளைக் கொன்றுவிடுவதாகச் சீறினான்.

 

அவள் எதிரேயே வந்து கொண்டிருந்தாள். பலாவின் கதியும், தன் கணவனின் சினமும், தன் மாற்றாளின் வஞ்சமும் அவளுக்குப் புரிந்தது. நடுக்கத்துடன் கணவனருகே மெல்ல வந்தாள். குறவன் அவள்மீது பாய்ந்து, எதுவும் கேளாமலே அவளை அடித்து வதைக்கத் தொடங்கினான். அவள் அடி தாங்காமல் கதறினாள்.

 

அந்தக் கதறலை அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த ஒளவையார் கேள்வியுற்றார். அவ்விடத்துக்கு விரைந்தார். குறவனின் கொடுமைச் செயல் அவரை மிகவும் வாட்டிற்று. மாற்றாளின் முகம் அவளுடைய சூதினைப் பறைசாற்றியதனையும் அவர் கண்டார்.

 

"இவளை ஏனப்பா, பாவம் இப்படிப் போட்டு அடிக்கிறாய்? இவளோ ஏதும் அறியாதவளாக இருக்கிறாளே? இவளை அடிப்பதை விட்டு விடு" என்றார்.

 

"ஆசையோடு வளர்த்த uഖiഞഖ அநியாயமாக இவள் வெட்டிவிட்டாள். இவளையும் இப்போதே கொன்றுவிடப் போகிறேன்” என்றான் அவன், மிகுந்த சீற்றத்துடன்.

 

"கொன்றால் பலா பழையபடி ஆகிவிடுமா?" என்றார் ஒளவையார். "கொல்லாவிட்டால் பலா வந்துவிடுமா?" என்றான் அவன். “வரும்” என்று கூறினார் ஒளவையார். இறைவனை வேண்டிப் பாடினார். அந்தப் பாடல் இது.

 

கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா

ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய் - சீரிய

வண்டுபோற் கொட்டையாய் வன்காயாய்ப் பின்பழமாய்ப்

பண்டுபோல் நிற்கப் பணி.

 

"கூர்மையான அரிவாளினாலே வெட்டப்பெற்ற வளைந்த இந்தப் பலா மரமானது, ஒர் இலை துளிர்த்ததாகிப்பின் கிளைகள் விட்டதாகிப் பின் உயரிய மரமும் ஆகிப், பின் சிறந்த வண்டு போலத் தோன்றும் கொட்டையாய்ப் பின் வன்மையான காயாகிப் பின் பழமும் ஆகி, முன் நின்றதுபோல முழுப் பலா மரமாகவே நிற்பதாக” என்பது பொருள்.

  • All
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10